வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டறிய நாட்டில் முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில், தமிழ்நாடு வனப்படை நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி செலவில் ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டது.
இந்த மையத்தை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) சுப்ரியா சாஹூ முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கூடலூர் வனக்கோட்டப் பகுதிகளில் மனித–விலங்கு மோதல்களை அரசு தீவிரமாகக் கவனித்து வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், இப்பகுதி யில் வனவிலங்கு நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி யுள்ளதாக அவர் கூறினார்.
யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நகரும் போது, அவற்றின் உருவம் 10 சதவீதம் மட்டுமே தென்பட்டாலும், மீதமுள்ள பகுதி மரங்கள், இலைகள் மறைத்திருந்தா லும் கூட, அதனை கண்டறிந்து உடனடி எச்சரிக்கை வழங்கும் தொழில்நுட்பம் இம்மையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த திட்டம், செயல்முறை விளக்கமாகக் காண்பிக்கப்பட்டது.
24 மணி நேர கண்காணிப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, ஜீன்பூல் மரபியல் தோட்டத் தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வனவிலங்குகளால் அதிகமாக பாதிக்கக்கூடிய 46 இடங்கள் கண்டறியப்பட்டு, 34 இடங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படை யிலான கண்காணிப்பு கேமராக்கள், 12 இடங்களில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனவிலங்கு நடமாட்டம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றார்.
முன்னெச்சரிக்கை வசதி
வனவிலங்குகள் நகரும் பாதையை முன்கூட்டியே கண்காணித்து, கட்டுப்பாட்டு மையம் மூலம் வனப்பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் அளிப்பதன் மூலம், மனிதர் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இம்மையம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், காட்டு யானை நடமாட்டங் களை கண்காணிக்க இரண்டு தெர்மல் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வனவிலங்கு நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு வாட்ஸ் அப், வாய்ஸ் மெசேஜ் மூலம் எச்சரிக்கை வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 முதல் 60 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள விலங்குகளை துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் அனைத்து நிகழ்வுகளும் பதிவாகுவதால், எதிர்காலத்தில் வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதிகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும், மனித–விலங்கு மோதல்களை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க இயலும் என்றும் அவர் கூறினார்.
உதவி எண் வெளியீடு
இதனைத் தொடர்ந்து, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கூடலூர் வனக்கோட்டத்தில் மனித, விலங்கு மோதல் மற்றும் வனப் பாதுகாப்பிற்கான கட்டணமில்லா உதவி எண் 1800 425 4353-ஐ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டார். மேலும், அதிவிரைவு படையினருக்கு பாதுகாப்பு உடைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாளர் அனுராக் மிஷ்ரா, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கள இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) கிருபாசங்கர், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம் (நீலகிரி), வெங்கடேஷ் பிரபு (கூடலூர்), துணை இயக்குநர் (முதுமலை புலிகள் காப்பகம்) கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, உதகை நகர்மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.