வந்தே பாரத் ‘ஸ்லீப்பர்’ ரெயில்களின் கட்டண விவரம்: குறைவாக பயணம் செய்தாலும் 400 கி.மீ.க்கான கட்டணம்
புதுடெல்லி, ஜன.-
வந்தே பாரத் ‘ஸ்லீப்பர்’ ரெயில்களின் கட்டண முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. 400 கி.மீ.க்கு குறைவாக பயணம் செய்தாலும் 400 கி.மீ.க்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தற்போது, நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ ரெயில்கள், உட்கார்ந்து பயணம் செய்யும்வகையில் இருக்கை வசதியுடன் மட்டும் இருக்கின்றன.
தூங்கும் வசதி கொண்ட ‘ஸ்லீப்பர்’ பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய முதலாவது ரெயிலை பிரதமர் மோடி 17-ந் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கவுகாத்தி-கொல்கத்தா வழித்தடத்தில் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலின் தற்காலிக கட்டண விவரத்தை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், விரிவான கட்டண விவரங்களுடன் ரெயில்வே வாரியம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வந்தே பாரத் ‘ஸ்லீப்பர்’ ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி., இரண்டாம் வகுப்பு ஏ.சி., மூன்றாம் வகுப்பு ஏ.சி. என 3 வகுப்புகள் மட்டுமே இருக்கும். கட்டணம் வசூலிக்கும் குறைந்தபட்ச தூரம் 400 கி.மீ. ஆகும். அதாவது, 400 கி.மீ.க்குள் எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், 400 கி.மீ.க்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
400 கி.மீ.வரை முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிக்கு ரூ.1,520, இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிக்கு ரூ.1,240, மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிக்கு ரூ.960 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
400 கி.மீ.க்கு மேற்பட்ட பயணத்துக்கு கி.மீ. ஒன்றுக்கு முதல் வகுப்புக்கு ரூ.3.20 என்றும், இரண்டாம் வகுப்புக்கு ரூ.3.10 என்றும், மூன்றாம் வகுப்புக்கு ரூ.2.40 என்றும் கட்டணம் வசூலிக்கப்படும். இதுதவிர, ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படும்.
இந்த ரெயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் வழங்கப்படாது.
பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், ரெயில்வே ஊழியர்கள் பணிநிமித்த ஒதுக்கீடு ஆகிய ஒதுக்கீ்ட்டு இடங்கள் மட்டும் இருக்கும்.
இந்த ரெயில்களில், மின்னணு முறையில் மட்டுமே கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படும். அப்போதுதான் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் ‘ரீபண்ட்’ வழங்க முடியும்.
டிக்கெட் கவுண்ட்டர் மூலம் எடுக்கப்படும் டிக்கெட்டுக்கும் மின்னணு கட்டணம்தான் விருப்பமான முறையாக பின்பற்றப்படும். ஒருவேளை பயணியால் மின்னணு கட்டணம் செலுத்த முடியாவிட்டால், ரத்து செய்யும்பட்சத்தில், வழக்கமான விதிமுறைகளின்படி அவர்களுக்கு ‘ரீபண்ட்’ வழங்கப்படும்.
தனி இருக்கை தேவைப்படாத குழந்தையுடன் பயணம் செய்பவர்களுக்கும், 60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், 45 வயதை கடந்த பெண்களுக்கும் இருப்பு அடிப்படையில் தானாகவே கீழ்படுக்கை ஒதுக்க முயற்சிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
17-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில், பயணிகளுக்கான வழக்கமான போக்குவரத்தை விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.