ரூ.209 கோடியில் சமூகநீதி விடுதி, பள்ளிக் கட்டடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்தார்
Oct 07 2025
42
சென்னை, அக்.6–
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.209.18 கோடி செலவிலான 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள், தொல்குடி திட்டத்தின் கீழ் 250 வீடுகள், 16 கிராம அறிவுசார் மையங்கள் மற்றும் 9 பல்நோக்கு மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, ரூ.13.41 கோடி செலவில் 68 வாகனங்களின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 137 கோடியே 31 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், 39 கோடியே 29 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் 39 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்கள்,
12 கோடியே 72 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் பழங்குடியினர்களுக்கு தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 250 வீடுகள், 15 கோடியே 93 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கிராம அறிவுசார் மையங்கள், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 பல்நோக்கு மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 3 வாகனங்கள், என மொத்தம் 26 வாகனங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக 5 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் 25 அவசரகால ஊர்திகள், 4 கோடி ரூபாய் செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, தாட்கோ தலைவர் இளையராஜா, ஆதிதிராவிடர் நல ஆணையர் த.ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?