ரவியின் வீட்டில் சண்டை என்பது நாள்காட்டியின் தேதியைப் போல வழக்கமான ஒன்று.
அவன் மனைவி கௌரியும், தாய் பானுவும் பூனைக்கும் எலிக்கும் இடையிலான அமைதி போல,
பாம்புக்கும் கீரிக்கும் உள்ள புரிதல் போல.
ஒரே வீட்டில் இருந்தாலும்
இருவரும் தனித்தனித் தீவுகள்.
ஒருவர் மூச்சை ஒருவர்
சத்தமாகக் கூட கேட்க விரும்பாதவர்கள்.
ரவி தான் இடைப்பட்ட பாலம்.
அன்று மதியம், ஆபீஸில் வேலையில் மூழ்கியிருந்த போது அவனது கைபேசி அலறியது.
“ரவீ… உன் அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க!”
இதயம் ஒரு நொடி நின்றது.
மனதில் முதல் எண்ணம்
வலியோ, பயமோ அல்ல…
“கௌரி என்ன செய்திருப்பாள்?” என்பதுதான்.
“எப்படியும் அவள் உதவி செய்ய மாட்டாள்…” அந்த நம்பிக்கை இல்லாமையோடு மின்னலைப் போல வீட்டிற்கு ஓடினான்.
வீட்டில் யாருமில்லை.
பக்கத்து வீட்டுக்காரி சொன்னாள்,
“ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்கப்பா…”
ரவியின் பைக் மருத்துமனை நோக்கி ஓடியது.
அங்கே… மருந்து வாசனைகளுக்கிடையே இடையே
அவனை கண்ட காட்சி
அவனை உலுக்கி விட்டது.
கால் முறிந்த நிலையில்
படுக்கையில் படுத்திருந்தாள் தாய்.
அவள் அருகில் கௌரி.
பெட்போன் வைப்பது, டவல் பாத் செய்து விடுவது, நேரம் தவறாமல் மாத்திரை கொடுப்பது, எதிலும் முகச்சுளிப்பு இல்லை. வார்த்தையில் கடுமை துளியும் இல்லை.
அவள் வழக்கமான கௌரி அல்ல.
ஆச்சரியம் தாங்காமல் ரவியே கேட்டே விட்டான். "எப்படி கௌரி… நீ?”
அவள் மெல்லச் சிரித்தாள். "அது வேற… இது வேறங்க!...
ஆழ் மனசுல நிரந்தர அன்பு இருக்கும்.
ஆனா மேல் மனசுல… தற்காலிக வெறுப்பு… தற்காலிக சண்டை…
சின்னச் சின்ன ஈகோ… எல்லாம் இருக்கும் அதெல்லாம் அப்பப்ப வரும் அப்பவே போயிடும்"
ரவியின் கண்கள் ஈரமாயின.
"சண்டை என்பது அன்பின் மறைமுக வெளிப்பாடு என்பதையும், பெண் மனம் பகை பேசினாலும்
கருணையில் ஒருபோதும்
குறை வைக்காது என்பதையும்"
அந்த நிமிடத்தில் ரவி தெளிவாய்ப் புரிந்து கொண்டான்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?