வணக்கம்.தமிழ்நாடு இ.பேப்பர்க்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
மாதங்களில் அவள் மார்கழி 'என்றார் கவியரசு கண்ணதாசன். பெண்களுக்கு உகந்த மாதங்கள் எத்தனையோ இருந்தும் மார்கழி மாதமே சிறப்பாக பேசப்படுகிறது.
அதற்குக் காரணம் சூடிக்கொடுத்த சுடர்மணி ஆண்டாள் பாடிய'திருப்பாவை'யும்; மனதை உருக்கும் பாடல்கள் பாடிய மாணிக்க வாசகரின் ' திருவெம்பாவை'யும் ஆகும்.
மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் விடியற் பொழுதில் எழுந்து...தன் தாய் மற்றும் தோழிகளுடன் ஆற்றில் நீராடி... ஆற்று மணலை எடுத்து பாவை ( பொம்மை) செய்து..அதனை வழிபட்டு..தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும்; வீட்டிலும்- நாட்டிலும் செல்வம் தழைக்க
வேண்டும்; உற்றார் உறவினர்கள் நோயின்றி வாழ வேண்டும்' என மார்கழி முப்பது நாளும் நோன்பு இருப்பார்கள்.இதனைதான் ' பாவை நோன்பு' என்பர்.
இதனை ஆண்டாள் இப்படி பாடி இருப்பாள்...
" மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்...!" என்று. இது மட்டுமல்ல;
"மாதங்களில் நான் மார்கழியாக
இருக்கின்றேன்..! என்றார் கிருஷ்ண
பரமாத்மா.
ஆதலால் ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழுந்து..இறை நினைப்போடு..நீராடி நோன்பு இருந்து
அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கும்; சிவாலயத்திற்கும்
பெண்கள் கூட்டமாக பஜனை பாடிச்
சென்று இறைவனை வழிபடுவர்.
மார்கழி மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் இளம்பெண்கள் நீராடி விட்டு; தன் வீட்டு வாசலில் சாணம் நீர்
தெளித்து, சுத்தம் படுத்தி; அரிசி மாவில்
பெரிய அளவில் கோலமிட்டு கோலத்தின் மையத்தில் சாணப்பிள்ளையார் பிடித்து வைத்து
அதில் மஞ்சள் குங்குமம் இட்டு..பூசணிப்பூக்களால் அழகு படுத்துவார்கள். அப்படி செய்யும் போது
சாணம் நீர் கண்ணுக்குத்தெரியாத
கிருமிகளைக்கொன்று...நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது; அடுத்து
சாணத்தில் மகாலெட்சுமி உறைவதாக
நம்ப படுகிறது.
பெண்கள் காலையில் எழுந்து மார்கழி பனியில் கோலமிடுவதால்
எண்ணற்ற உயிரினங்கள் அரிசி கோலமாவை தின்று உயிர் வாழ்வது
மிகுந்த புண்ணியத்தை தருகிறது.
வைகறை பொழுதில் சுத்தமான ஓசோன் காற்று கிடைக்கிறது. கோலமிடும் போது மனது ஒருநிலைப்படுகிறது.கற்பனைத்திறன்
அதிகரிக்கிறது; குனிந்து நிமிர்ந்து வளைந்து எழுந்து கோலமிடுவதால்
உடல் ஆரோக்கியம் எவ்வித செலவுமின்றி கிடைக்கிறது.
நோன்பை எப்படி கடைபிடிக்க வேண்டும்? என ஆண்டாள் பாடுகிறாள்
இப்படி....
" நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்;
நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்;
மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன
செய்யோம்...!"- என்கிறாள்.
சங்க இலக்கியங்களிலும்..மார்கழி
மாதத்தின் பாவைநோன்பைப் பற்றி
சிறப்பித்துள்ளனர்.
" அம்பா ஆடலில் ஆயத்தொடு கன்னியர்..!"என பரிபாடலும்;
" மகளிர் கை செய்ப்பாவை துறைக்கண் இருக்கும்...!" என அகநானூறும் ;
" வான் பெயர் நனைந்த புறத்த நோன்பியர்..!" என நற்றினைப் பாடல்களும் மேன்மை படுத்துகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள்
எதற்கும் ஒப்பிட முடியாத உயர்வானவர்கள். ஒரு பெண் ஆறு விதமான தன்மைக்கொண்டு விளங்குகிறாள். தெய்வமாக; மனைவியாக; தாயாக; தோழியாக; ஆசானாக; போதகனாக ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அப்படிப்பட்ட பெண்களின் உடல்நலம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும்
நலமாக இருக்க முடியும். ஆதலால்
ஆறு, குளம் அருகில் இல்லை என்றாலும்கூட..இன்றைய நவநாகரிக
பெண்கள் மார்கழி மாதம் நோன்பு இருந்து..விடியலில் வீட்டில் நீராடி..
இல்லத்தையும்; உள்ளத்தையும் வளமாக்குவோம்...!!!

ஆக்கம்: கவிஞர்.இல.இரவி
செ.புதூர்.612203
தஞ்சாவூர் மாவட்டம்
இணைப்பு: எனது நிழற்படம்