மரணத்தை விட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை!’ - காசாவில் இருந்து ஒரு வேதனைக் குரல்
Sep 22 2025
72
காசா:
”இந்தத் தருணத்தில் மரணத்தைவிட இரக்கமானது எங்களுக்கு எதுவுமில்லை”. - இது காசா நகரின் 38 வயது நிரம்பிய முகமது நாசர் கூறியுள்ள வார்த்தைகள். இன்றைய நிலவரப்படி காசாவில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் புதிதாக 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்தான் அங்கிருந்து இப்படியொரு வேதனைக் குரல் ஒலித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இன்றுவரை தொடர்ந்து தாக்கி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என்பதே இஸ்ரேலின் முழுக்கமாக இருக்கிறது. இந்த உறுதிப்பாட்டை முன்வைத்தே இடையில் லெபனான், சிரியா, ஏமன், ஈரான், கத்தார் எனப் பல நாடுகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவிட்டது.
இதில் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. காசாவில் வான்வழித் தாக்குதல் எவ்வளவு சேதாரத்தை விளைவிக்க முடியுமோ அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில், தற்போது தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மட்டும் பல்வேறு தாக்குதல்கள் மூலம் காசாவாசிகள் 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று நிவாரண முகாம்களாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்திவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாலஸ்தீனியர்கள் அல் மவாசி பகுதிக்குப் பெயரும்படி இஸ்ரேல் படைகள் வலியுறுத்தி வருகின்றன. அங்கு மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்று வலியுறுத்துகின்றனர். இதுவரை காசாவில் இருந்து 4,50,000-க்கும் அதிகமானோர் வெளியேறிவிட்டனர். எஞ்சியிருப்பவர்களில் சிலர் வெளியேற ஆசைப்படுகின்றனர். ஆனால், தங்களிடம் பசிக்கு ரொட்டி வாங்கக் கூட பணமில்லை எங்கே செல்வது என்று கேட்கின்றனர். இன்னும் சிலர், நாங்கள் எங்கே செல்ல முடியும். இது எங்கள் மண். மரணம் வரும்வரை இங்கேயே இருக்கிறோம் என்று கூறுகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?