மதுபோதையில் ரெயிலில் செல்வோரை மடக்கிப்பிடிக்க ரெயில்வே போலீசார் தீவிரம்
சென்னை,
தமிழ்நாட்டில் ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தநிலையில் ரெயிலில் ஒருசில பயணிகள் மதுகுடித்து விட்டு பயணம் செய்வதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மதுபோதையில் கட்டுப்பாட்டை இழக்கும் போதை ஆசாமிகள் சில சமயங்களில் சக பயணிகளிடம் தேவையில்லாமல் தகராறில் ஈடுபடுவது, ஆபாசமாக பேசுவது என சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும், ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் செல்வந்தர்களும் சர்வ சாதாரணமாக ரெயில் பெட்டியிலேயே அமர்ந்து மது அருந்துவதாக பயணிகளிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களால் ரெயிலில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுபோதையில் பயணம் செய்பவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மதுபோதையில் ரெயில் பயணம் மேற்கொள்வது ரெயில்வே பாதுகாப்பு சட்டம் 145-ஏ-படி தண்டனைக்குரிய குற்றமாகும். அவர்களுக்கு, ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் மதுபோதையில் பயணம் செய்த 135 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 21 பேர் சிக்கினர்.
இனிவரும் காலங்களில் புகாரின் பேரில் மட்டுமல்லாமல் மதுபோதையில் பயணம் செய்யும் அனைவருக்கும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ரெயிலில் சந்தேகப்படும் படி பயணம் செய்பவர்களிடம் சுவாச பகுப்பாய்வு (ப்ரீத் அனலைசர்) கருவிகள் மூலம் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் மதுபோதையில் பயணம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள், ரெயில் பயணத்தின் போது ஏதாவது இடையூறுகளை சந்தித்தால் உடனடியாக 139 என்ற ரெயில்வே பாதுகாப்பு உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?