மண்ணில் புதைந்திருந்த அம்மன் கோயில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுப்பு - இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை
Jul 12 2025
10

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள விடத்திலாம்பட்டியில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட அம்மன் கோயிலை மீட்டெடுக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது.
விடத்திலாம்பட்டியில், மாமுண்டி ஆற்றின் ஷெட்டா் பகுதி அருகே பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. சுமாா் 7 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட இக்கோயில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.
கோயில் முழுவதும் புதைந்திருந்த நிலையில், அதன் மூலவா் விமானம் மட்டும் தரையோடு தரையாக காணப்பட்டது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் அறிக்கையின்படி, இக்கோயிலை மீட்டு திருப்பணி செய்ய ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, இக் கோயிலை மீட்டெடுக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மண் அகற்றப்பட்டு கோயில் கட்டடம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோயிலின் மூலவா் பகுதி மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், கருவறையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மூலவா் சிலைகள், திரிசூலம் ஆகியவை காணப்படுகிறது. தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் வினோத்குமாா், கோயில் அறங்காவலா் மல்லக்கவுண்டா், ஊா் முக்கியஸ்தா் மனோகா் ஆகியோா் செய்து வருகின்றனா்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?