பைக்கில் ஏறியதில் இருந்து பெண்ணின் கால்கள் மீது கையை வைத்தபடியே பயணித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் இளம் பெண் ஒருவர் விடுதியில் தங்கி பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த நவம்பர் 6ம் தேதி ஒரு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மாலை நேரம் ஆகியுள்ளது. இதனால் அங்கிருந்து தான் தங்கியிருக்கும் விடுதிக்கு செல்ல ரேபிடோ பைக் டாக்ஸியில் செல்ல முடிவு செய்து முன்பதிவு செய்து உள்ளார். பின்னர் முன்பதிவு செய்வதைத் தொடர்ந்து, ரேபிடோ பைக் டாக்சி ஓட்டுநர் பிக் அப் பாயிண்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து ஓடிபி நம்பரை பதிவு செய்து அந்த இளம்பெண்ணை பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது பைக் டாக்சி ஓட்டுநர் அந்த இளம்பெண்ணின் தொடைகளை தொட்டு அறுவறுக்கத்தக்க வகையில் செய்துள்ளார். அவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண் சற்று நகர்ந்து அமர்ந்துள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அதைதான் மீண்டும் மீண்டும் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக வாகனத்தை நிறுத்த கூறியுள்ளார்.
ஆனால், இதனை பொருட்படுத்தாத பைக் டாக்சி ஓட்டிவந்த இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். இது அவருக்கு மேலும் மனஅழுத்தம் மற்றும் பயத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்துள்ளார். அதில் பயணத்தின் போது , பைக் டாக்சி ஓட்டுநர் செய்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து தங்கும் விடுதிக்கு வந்த இளம்பெண்ணை பைக் டாக்சி ஓட்டுநர் டிராப் செய்தார். அப்போது அந்த பகுதிக்கு உடனே அவரது நண்பர் வந்துள்ளார். மேலும் பைக் டாக்சி ஓட்டுநரான இளைஞரை கண்டித்துள்ளார்.
மேலும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வீடியோவாகபதிவு செய்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில், தான் சந்தித்த கசப்பான சம்பவம் என்றும் இதனால் கடும் மன உளைச்சலை சந்தித்ததாக கூறினார். மேலும் அந்த வீடியோவில், பைக் டாக்சி ஓட்டுநரின் தகவல்களையும் (வாகன பதிவு எண் உட்பட) கான்பித்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சமூகதளவாசிகள் வீடியோவை பகிர்ந்தனர். மேலும் சம்மந்தப்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இளம் பெண் வில்சன் கார்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் விரைவில் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டின் பேரில், பெங்களூரு உல்லால் முனியப்பா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (28) என்ற பைக் டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். போலீசார் கூறியதாவது “பெண்ணின் அளித்த ஆதாரங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் முக்கிய சான்றுகளாக இருக்கின்றன. குற்றவாளி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.