பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு...? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
நியூயார்க்,
ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது நீண்டகால விவாத பொருளாக உள்ளது. ஒருவேளை ஏலியன்கள் இருக்கும் என்றால், அவை உருவில், அளவில் எப்படி இருக்கும்? மனிதர்களை போன்ற வடிவை கொண்டிருக்குமா? அல்லது வேறு ஏதேனும் வடிவத்துடன் இருக்குமா? அவற்றின் சக்தி எந்தளவுக்கு இருக்கும்? என்பன போன்ற பல மர்ம முடிச்சுகள் அவிழாமல் உள்ளன.
இந்நிலையில், பூமியின் மீது வருகிற நவம்பரில் மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்கம் ஏற்படுத்த போகிறது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். பூமியை நோக்கி மேன்ஹேட்டன் நகரம் அளவிலான அந்த மர்ம பொருள் ஏவப்பட்டு உள்ளது என அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
அது, நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்து நிறைந்த ஒன்றாக இருக்கும். அந்த பொருளுக்கு விஞ்ஞானிகள் 3I/அட்லஸ் (இதற்கு முன்பு A11pl3Z என அறியப்பட்டு இருந்தது) என ஆய்வாளர்கள் பெயரிட்டு உள்ளனர். இந்த மர்ம பொருள், ஏலியன்களின் தொழில் நுட்பம் உதவியுடன், பூமி மீது திடீர் தாக்குதல் நடத்த கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஏலியன்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, அதற்காக பெரும் பங்காற்றி வரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பிரபல வான்இயற்பியலாளர் அவி லோயப். சர்ச்சைக்குரிய முரண்பாடான விசயங்களை வெளியிட்டு வருபவர். 2017-ம் ஆண்டில், முதன்முறையாக சூரிய குடும்பம் அல்லாத விண்கல் ஒன்று பூமியின் அருகில் வந்தது.
இதனை பற்றி குறிப்பிட்ட அவி, அது வேற்றுகிரகவாசிகளின் செயற்கையான விசாரணையில் ஒன்றாக இருக்க கூடும் என கூறி அப்போது சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ள அந்த மர்ம பொருளானது, நவம்பர் இறுதியில், சூரியனை நெருங்கி வரும். அப்போது, பூமியின் பார்வையில் இருந்து அது மறைவாக இருக்கும்.
இதனால், ரகசிய அதிவிரைவான சூழ்ச்சியான விசயங்களை அது நடத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சிலியில் உள்ள ரியோ ஹர்டாடோ பகுதியில் உள்ள தொலைநோக்கி ஒன்று முதன்முறையாக இந்த மர்ம பொருளை கண்டறிந்தது. 10 முதல் 20 கி.மீ. அகலம் கொண்ட இந்த பொருள் விநாடிக்கு 60 கி.மீ. வேகத்தில் நம் பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனை வருகிற செப்டம்பர் வரை தொலைநோக்கி வழியே பூமியில் இருந்து காணலாம். அதன்பின்னர், அது சூரியனை நெருங்கி விடும். இதனால், பூமியில் இருந்து, அப்போது அதனை தெளிவாக காண முடியாது. அதற்கு பின்னர், டிசம்பர் மாத தொடக்கத்தில் சூரியனின் மறுபுறம் இருந்து அந்த மர்ம பொருள் தெரிய தொடங்கும். இது 700 கோடி ஆண்டுகள் பழமையானது. அப்படியானால், சூரிய மண்டலத்திற்கும் முன், 300 கோடி ஆண்டுகள் பழமையானது.
அதனால், பூமி, சூரியனை விடவும் இது மிக வயது முதிர்ந்தது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடும் என தெரிகிறது. அதனால், சூரிய மண்டலத்திலேயே மிக விரைவாக செல்ல கூடிய பொருளாக இது பார்க்கப்படுகிறது. அளவிலும் பெரியது.
ஆனால், இதுபற்றி இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டி உள்ளது என கூறப்படுகிறது. எனினும், அது உண்மையானால், மனித இனம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையும் ஏற்படும் என ஹார்வர்டு விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், வருகிற நவம்பர் வரை ஏலியன்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்றும் அதன்பின்னர் அவர்களுடைய செயல்பாடுகளின் தாக்கம் என்னவாக இருக்கும் என்றும் ஆவலாக பார்க்கப்படுகிறது.