பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து - அரியருடன் பிளஸ் 2 பயிலும் 20,000 மாணவர்களின் நிலை என்ன?
திருச்சி:
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நிகழாண்டு முதல் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடைபெறாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 1-ல் அரியர் வைத்து, தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய நடைமுறையின்படி, பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலும், மாணவர்கள் பிளஸ் 2-க்கு செல்ல அனுமதி இருந்தது. பின்னர், பிளஸ் 2 தேர்வுகளுடன் சேர்த்து பிளஸ் 1 அரியர் தேர்வுகளையும் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு முதலே பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த மார்ச்- ஏப்ரலில் நடைபெற்ற பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த 20,000 மாணவர்களின், நிலை என்ன என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 பயிலும் இவர்களின் பிளஸ் 1 அரியர் பாடங்கள் குறித்த இறுதித் தீர்வு என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்தப்படுமா அல்லது அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த விவகாரத்தில் தேர்வுத் துறை விரைவாக உரிய முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியர் தேர்வு ரத்துக்கு அரசாணை: இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக திருச்சி மாவட்டத் தலைவர் பி.முருகன் கூறியது: தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கை வரவேற்கதக்கது. அதேவேளையில், தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1 அரியருடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு அந்த அரியர் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அரசாணை வெளியிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும். அப்போது தான் அந்த மாணவர்கள் நல்ல மனநிலையுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவார்கள் என்றார்.
இதுகுறித்து கல்வித் துறை வட்டாரங்களிடம் விசாரித்தபோது, ‘மாநிலக் கல்விக் கொள்கையை தொடர்ந்து விரிவான நெறிமுறைகள் ஒருசில நாட்களில் வெளியிடப்படும். அதில் இதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் அல்லது தனி அரசாணை வெளியாகவும் வாய்ப்புள்ளது’ என்றனர்.