அம்மா..... அம்மா...
என்று, வீட்டுவாசலில்
யாரோ சத்தம் போடுவதைக் கேட்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள் கீதா.... வாசலில் பால்காரர் பரமசிவம் நின்று கொண்டிருந்தார். அப்போது காலை மணி 10 இருக்கும்.
காலையில்தான் பால் வாங்கிட்டேனே என்று கீதா சொன்னதும், அம்மா, வர்ற ஒன்னாம் தேதி யிலெருந்து பால் விலை 45 லேருந்து 50 ஆகப் போகுது....அதை சொல்லிட்டு போகலா ம்னுதான் வந்தேன்....
ஏங்க....இப்பதான மூனு மாசத்துக்கு முன்னாடி 40 லிருந்து 45 ஆக்குனீங்க....இப்ப 50 ஆக்கப் போறேன்னு சொல்றீங்க....!
அம்மா....மாட்டுத் தீவனம் எல்லாம் விலை ஏறி போயிடுச்சும்மா.....
புண்ணாக்கு பருத்திக்கொட்டை, வைக்கோல், தவிடு இது ஏகத்துக்கும் விலை ஏறிபோயிடுச்சும்மா....மாடு வளர்க்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு! கட்டுப்படியாகல....! அதனால்தான் லிட்டருக்கு 5 ரூபாய் ஏத்தறமாரி ஆயிடுச்சு!
அதெல்லாம் சரிதான்.
உங்ககிட்ட மாடு வீட்டுலேயா இருக்கு?
எல்லாமே ரோட்டுலதானங்க நிக்கிது!
அந்தக் காலத்துல மாடு வளர்த்தவங்க, எல்லாரும் மாட்டுக்கு தீவனமா வைக்கோல், புல், தவிடு, புண்ணாக்கு பருத்திக் கொட்டை இதெல்லாம் போட்டு மாடுகளை வீட்டுலேயே வைச்சு வளர்த்தாங்க! தினமும் மாடுகளை குளிப்பாட்டி நல்லா பராமரிச்சு வச்சிருந்தாங்க!
இதனால பாலும் நல்ல தரமா சுத்தமா வாசனையாவும் இருந்துச்சு....
இன்னைக்கு நீங்க மாட்டை வீட்டுலேயா வச்சு வளர்க்குறீங்க
இரண்டு வேளையும் பாலை மட்டும் கறந்துகிட்டு, மாடுகளை ரோட்டுல திரியவிடுறீங்க!
பருத்தி,புண்ணாக்கு, வைக்கோல், புல், தவிடுன்னு எதுவும் அதுங்களுக்கு கொடுக்கறதே கிடையாது.
காலையிலேருந்து இரவு வரையிலும் நாள் முழுதும் மாடுகள் எல்லாம் நெகிழி பைகள், விளம்பர போஸ்டர்கள், காகிதங்கள் இவைகளை மட்டுமே தின்னுபுட்டு தன்னுடைய பசியைப் போக்கிகிட்டு இருக்குங்க....
மாடுகளை குளிப்பாட்டுறது...
அதுங்களுக்கு குடிக்க தண்ணீர் காட்டுறது எதுவுமே நீங்க செய்யறதுல்ல....
மாடு வளர்க்குறோங்குற பேருல, மாடுகள் பூரா இரவு, பகலா சாலையில்தான திரிஞ்சிகிட்டு இருக்கு... சாலையில் நிக்கிறதுனால விபத்துகளும் உண்டாகுது.... மாடுகளுக்கும் விபத்து ஏற்படுது....!
என்னமோ நீங்க மாடுகளை வீட்டுல வச்சு அதுங்களுக்கு தீனி கொடுத்து நல்லா பராமரிச்சு வளர்க்குற மாரில பேசறீங்க...!
சாலையில பேப்பர் நெகிழி பைகள், போஸ்டர்களை தின்னுகிட்டு நிக்கிற மாடுகளைப் பார்த்தாலே, இதுங்க கொடுக்கற பாலையா நாம குடிக்கிறோம்னு தோனுது....! உடம்புக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமாவும் இருக்கு...!
அதனால நானே பாலை நிறுத்திடலாம்னு நினைச்சுக் கிட்டு தான் இருந்தேன்.....!
நீங்க 40 ரூபாய்க்கு கொடுத்தாலும் எனக்கு பால் வேணாம்.... இந்த மாசத்தோட பால் கொடுக்கறதை நிறுத்திக்குங்க.... என்று படபடவென்று சொல்லியவாறு கீதா வீட்டுக்குள் சென்று விட்டாள்....!
+++++++++++++
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.