பாதி விலையில் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: தலைமறைவாக இருந்த ஏஆர்டி நகைக்கடை நிர்வாகிகள் 3 பேர் கைது
Feb 06 2026
18
சென்னை: முகப்பேர் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு ‘ஏஆர்டி ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தினர் பாதி விலையில் தங்கம் தருவதாகவும், முதலீட்டு பணத்துக்கு வாரம் 3 சதவீதம் வட்டி தருவதாகவும் கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்களை விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி ஏராளமானவர்கள் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர். இதையடுத்து, இந்த நிறுவனம் தமிழகமெங்கும் கிளைகளை நிறுவியது. சில நாட்கள் வட்டியை வழங்கி வந்த இந்த நிறுவனம், பின்னர் உறுதியளித்தபடி நடந்துகொள்ளாமல் இழுத்தடித்தது.
அது மட்டுமல்லாமல் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஒவ்வொருவராக தலைமறைவாகினர். இதையடுத்து பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக நிறுவன உரிமையாளர்கள், நிர்வாகிகள் என 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்த இந்நிறுவன நிர்வாகிகள் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த அந்தோணி விமல் ராஜ் (34), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஷமீர் அகமது (28), கொரட்டூரைச் சேர்ந்த பிரேமாவதி (62) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?