பாஜக அணியில் இருந்து வெளியேற விரும்பினார்’’ - அஜித் பவார் மரணம் பற்றி மம்தா சந்தேகம்
Jan 29 2026
39
கொல்கத்தா: ‘‘பாஜக கூட்டணியில் இருந்து அஜித் பவார் விலக உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று காலை 8.45 மணி அளவில் விமான விபத்தில் உயிரிழந்தார். சிறிய ரக விமானம் ஒன்றில் மும்பையில் இருந்து பாரமதி சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. அவருடன் சென்ற மேலும் 4 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து மம்தா பானர்ஜி சந்தேகத்தை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘எதிர்க்கட்சிகளின் நிலை என்னாகுமோ என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் ஆளும் கட்சியுடன்தான் (பாஜக) இருந்தார். ஆனால், அஜித் பவார் பாஜக அணியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு வேறொரு கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அறிக்கை அளித்ததாக நான் அறிந்தேன். இந்நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் முறையான விசாணையை நான் கோருகிறேன். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. வேறு எந்த ஏஜென்சி மீதும் நம்பிக்கை இல்லை. அனைத்து ஏஜென்சிகளும் முழுமையாக சமரசம் செய்யப்பட்டுவிட்டன.
உண்மையில் இது ஒரு மிகப் பெரிய இழப்பு. இன்று அவர் பாஜக அணியில் இருந்தார். ஆனால், நாளை அவர் தனது கட்சியின் உண்மையான இடத்துக்குத் திரும்புவார் (சரத் பவாருடன் சேருவார்) என எதிர்பார்க்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்பி கங்கனா ரணாவத், இப்படிப்பட்ட அற்பமான விஷயங்களைப் பேசுவதற்குப் பதிலாக அவர் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?