நல்ல மனம் வாழ்க

நல்ல மனம் வாழ்க


  பூஜாவுக்கு அன்று பணம் அவசரத் தேவையாக இருந்தது. எப்படியாவது ஒரு பத்தாயிரம் புரட்டி அம்மாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவள் வேலை பார்க்கும் கம்பெனியிலும் ஒன்றாம் தேதி சம்பள நாளைத் தவிர மற்ற நாட்களில் பணத்தை எதிர்பார்க்க முடியாது. யாரிடம் கேட்பது?


        எல்லாரும் நம்மை மாதிரிதான்.

சம்பளம் வாங்கியவுடன் ஊருக்கு அனுப்பி வைப்பதில் தான் இங்கு பெரும்பாலோரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

அனுப்பியது போக மீதி பணம் 

வீட்டு வாடகை, சாப்பாடு ,துணிமணி இவைகளுக்கே செலவாகி விடுகிறது .நிலைமை இப்படி இருக்க யாரிடம் போய் உதவி கேட்பது?

   

  அக்கா பரிமளாவை இரண்டு நாள் முன் வந்து பெண் பார்த்து விட்டுப் போனார்கள்.அவர்கள் இன்று போன் செய்து வேறு இடம் பார்க்க சொல்லிவிட்டார்களாம்.அம்மா சொன்னாள்.வரதட்சிணைதான் காரணம்.இதுவரை பத்து பேராவது வந்து பார்த்து விட்டுப் போயிருப்பார்கள்.எதுவும் அமையவில்லை. இத்தனைக்கும் பரிமளா நல்ல அழகி. தங்கமான குணம்.அவளைப் பெண் பார்த்து விட்டு போன வகையில் ஆன கடனை அடைக்கத்தான் அம்மா பத்தாயிரம் கேட்டிருந்தாள் .

  

   பரிமளாவும் பூஜா வேலை செய்யும் அதே கம்பெனியில்தான் வேலை செய்கிறாள்.அம்மா சொன்னதில் இருந்து அக்கா பற்றிய கவலையில் இருந்தாள் பூஜா.இப்போது பணப் பிரச்சினை வேறு.

    

    தன்னுடன் வேலை செய்யும்

கலாவிடம் கேட்கலாம் என்றால் 

அவளிடம் ஏற்கனவே வாங்கிய பணமே இன்னும் கொடுக்காமல் இருக்கிறது .மறுபடியும் கேட்பது மரியாதை அல்ல. யோசனை செய்தபடியே இருந்தவளின் கவனத்தில் வந்தவன் ராம் பிரகாஷ்தான்.

  அவளுடைய கம்பெனியில் உடன் பணிபுரிபவன். இன்னும் திருமணம் ஆகவில்லை. அம்மா, காலேஜ் படிக்கும் தங்கை என்று அளவான குடும்பம் .உதவும் மனப்பான்மை கொண்டவன்.அவனிடம் கேட்டுப் பார்க்கலாமே. அவனது வீட்டு முகவரி தெரியும் என்பதால்

நேரடியாக வீட்டிற்குச் சென்றாள்.


     கதவைத் தட்ட முயன்றவள் திறந்திருந்த ஜன்னல் வழியாக பேச்சுக் குரல்கள் கேட்கவே கவனிக்க ஆரம்பித்தாள். பேச்சின் இடையே தன் பெயர் வேறு அடிபடுவதைக் கேட்டு தயங்கி நின்றாள்.


   "அம்மா! பரிமளா ரொம்ப நல்ல பொண்ணு.என் கூட வேலை செய்யற பூஜாவோட அக்காதான்.அப்பா இல்லாத பொண்ணான அவ தன்னோட அக்காவுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தை செஞ்சு பார்த்துடணும்னு கஷ்டப்பட்டு உழைக்கிறா. அவங்க அக்காவுக்கு வந்த மாப்பிள்ளை எதுவும் வரதட்சிணை பிரச்சினையால அமையல.பரிமளா ரொம்ப நல்ல பொண்ணுமா.அவள எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.அவள உங்க சம்மதத்தோட நானே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்.இல்லாதவங்க வலியும்,வேதனையும் இல்லாதவங்களுக்குதான புரியும்?.நாமதான அவங்களுக்கு கூட நிக்கணும்? ." என்று ராம்பிரகாஷ் தன் அம்மாவிடம் 

பேசப் பேச நெகிழ்ந்து போய் நின்றிருந்தாள் பூஜா.

  

  "உன் விருப்பம்பா.நான் எப்ப உன் ஆசைக்கு குறுக்கே நின்னிருக்கேன்?.அடுத்த வாரமே பொண்ணு கேட்டுப் போகலாம்." அம்மா சொல்லச் சொல்ல அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது கேட்டுக் கொண்டிருந்த பூஜாவுக்கு..



மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%