news Breaking News
clock

தூத்துக்குடியில் தாமிர உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடியில் தாமிர உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


சென்னை, பிப். –


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், பசுமை தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நீர், நிலம், காற்று மாசு ஏற்படுத்துவதாகக் கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, 2018 ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில், பசுமைத் தாமிர உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி, தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம், கடந்த ஜனவரி 9 ம் தேதி விண்ணப்பித்திருந்தது. பசுமை தாமிரம் குறித்த பல்வேறு ஆய்வு அறிக்கைகளை இணைத்து அளிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்தை நிராகரித்து, கடந்த ஜனவரி 27 ம் தேதி அரசு உத்தரவிட்டது.


இந்த உத்தரவை ரத்து செய்து, நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல்துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுரங்கத் துறை அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கிய பன்னோக்கு நிபுணர் குழுவை அமைத்து, பசுமைத் தாமிரம் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடக் கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.


தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டத்தை முன்வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தான் பதிலளிக்க முடியும் என கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வேதாந்தா மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை, கனிமவளத்துறை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் குழுவை அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News