news Breaking News
clock

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்த டிரம்ப்

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்த டிரம்ப்

நியூயார்க்,


அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் பொற்காலம் மீட்டெடுக்கப்படும் என கூறி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மற்றும் அதன் நிருபர்கள் 4 பேருக்கு எதிராக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில், டிரம்ப் சார்பில் அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், டிரம்புக்கு எதிராக உள்நோக்கத்துடன் மற்றும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுரைகளை, பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அவர்களுடைய பத்திரிகையாளர்கள் 2 பேர் எழுதிய புத்தகமும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் உள்ளது என்றும் அது தொடர்பான கோர்ட்டு ஆவணங்கள் குறிப்பிட்டு உள்ளன.


பல ஆண்டுகளாக எழுதப்பட்ட இந்த நோக்கத்திலான கட்டுரைகள், 2024-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் வரை வெளிவந்துள்ளன. அவர்கள் இந்த கட்டுரைகளை, அவற்றின் பொய்மை தன்மையை பற்றி நன்றாக அறிந்திருந்தும், அவற்றை வெளியிட்டு உள்ளனர் என அதுபற்றிய டிரம்ப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறிப்பிடுகிறது.


இதனை டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவரை பற்றி பொய்யாகவும், அவதூறு ஏற்படுத்தும் நோக்கிலும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, செய்திகளை பரப்பி வருகிறது. கிட்டத்தட்ட இடதுசாரி ஜனநாயக கட்சியின் ஊதுகுழலாக அது உருமாறி வருகிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.


இதனை தொடர்ந்து, அந்த பத்திரிகைக்கு எதிராக ரூ.1.32 லட்சம் கோடி (15 பில்லியன் அமெரிக்க டாலர்) நஷ்ட ஈடு தரும்படி கோரியுள்ளார். எனினும், இதுபற்றிய கேள்விக்கு தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தரப்பில் இருந்து உடனடியாக பதில் எதுவும் இன்று அளிக்கப்படவில்லை.


கடந்த காலங்களிலும் டிரம்ப், இதுபோன்று அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகைக்கு எதிராகவும் அவர் ரூ.88,000 கோடி (10 பில்லியன் அமெரிக்க டாலர்) நஷ்ட ஈடு கோரினார். அந்த பத்திரிகையில், டிரம்புக்கும் கோடீசுவர பைனான்சியரான ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News