மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாகும். இந்நாளில் சிவபெருமான் நடராஜர் வடிவில் காட்சியளித்ததால், அதை ஆருத்ரா தரிசனம் என்பர். இந்நாளில் சிதம்பரத்தில் உள்ள நடராசருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.அந்த வகையில் ஆருத்ரா தரிசனம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் தேதி வருகிறது. மேலும் இந்த நாளில் சிவபெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைத்து வழிபடுவது வழக்கம். இந்த திருவாதிரை களியை உங்கள் வீட்டிலும் செய்ய வேண்டுமா? அதுவும் மிகவும் சுலபமாக, குக்கரில் இந்த திருவாதிரை களியை செய்யலாம் என்பது தெரியுமா?நீங்கள் ஆருத்ரா தரிசனத்தன்று திருவாதிரை களியை வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? கீழே திருவாதிரை களியை குக்கரில் எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: * பச்சரிசி - 1 கப் * பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் * பொடித்த வெல்லம் - 2 கப் * தண்ணீர் - 1 கப் + 3 கப் * உப்பு - 1 சிட்டிகை * துருவிய தேங்காய் - 1/2 கப் * நெய் - 1 டீஸ்பூன்/தாளிப்பதற்கு.. * நெய் - 3 டீஸ்பூன் * முந்திரி - 10 * ஏலக்காய் - 3 செய்முறை: * முதலில் பச்சரிசியை முந்தைய நாளே நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதை ஒரு துணியில் போட்டு பரப்பில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் பாசிப்பருப்பையும் 2 முறை கழுவி, உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் மறுநாள் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் பச்சரிசியை சேர்த்து லேசாக நிறம் மாற வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். * பின் அதே வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து, அதையும் லேசாக நிறம் மாற வறுத்து இறக்கி, பச்சரிசியுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும். * அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பச்சரிசி மற்றும் பருப்பை சேர்த்து, ரவை பதத்திற்கு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் பொடித்த வெல்லத்தை போட்டு, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லத்தைக் கரைய விட்டு இறக்க வேண்டும். * பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கரைத்த வெல்லத்தை வடிகட்டி ஊற்றி, அத்துடன் 3 கப் தண்ணீர், 1 சிட்டிகை உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும். * வெல்ல நீரானது நன்கு கொதித்த பின், மிதமான தீயில் வைத்து அதில் பொடித்து வைத்துள்ள அரிசி பருப்பு பொடியை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து விட வேண்டும். * பின் அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, மூடி வைத்து 2-3 நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். 6 நிமிடம் கழித்து மூடியை திறந்து, களியை கிளறி விட்டு இறக்க வேண்டும். * பிறகு அதை குக்கரில் வைக்கும்படியான ஒரு பாத்திரத்தில் களியை போட வேண்டும். * அதன் பின் குக்கரில் நீரை ஊற்றி, பின் களியை போட்டு வைத்துள்ள பாத்திரத்தை வைத்து, தட்டு கொண்டு மூடி, பின் குக்கரை மூடி, குறைவான தீயில் 1 விசில் விட்டு இறக்க வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, களியை கிளறி விட வேண்டும். * இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து வறுத்து, பின் வேக வைத்துள்ள களியை சேர்த்து நன்கு கிளறி, பொடித்த ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, 1 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான திருவாதிரை களி தயார்.
Balachandar