திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலம் *பல லட்சம் பக்தர்கள் தரிசனம் * விண்ணைப் பிளந்தது 'அரோகரா'
திருச்செந்தூர், ஜூலை 8-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று நடந்த குடமுழுக்கு விழாவில் பலலட்சம் பக்தர்கள் கண்டு மனம் மகிழ்ந்தனர்.அரோகரா முழக்கம் விண்ணை பிளந்தது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குடமுழுக்கு விழா நடந்தது. இதற்காக கோவிலின் மேற்கு கோபுரத்தின் அருகே கடந்த 40 நாட்களுக்கு முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. சுமார் 8000 சதுர அடியில் பிரம்மாண்ட யாகசாலையில் கடந்த 1 ம் தேதி முதல் பூஜைகள் நடந்தன.பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்கான வசதிகளை காவல்துறையினர் செய்திருந்தனர். இதற்காக சுமார் 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரோகரா முழக்கம்
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது.
கோவிலை சுற்றி வந்த கடத்திற்க்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் கடம் கோவிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அதிகாலை சரியாக 6.50 மணிக்கு 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அப்போது பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு ஆரோகரா’ என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.
புனித நீர் தெளிப்பு
குடமுழுக்கு விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் இருந்த கடற்கரை பகுதியில் 20ராட்சத ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு ட்ரோன் மூலம் மூன்று முறை பக்தர்கள்மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழா நிறைவு பெற்றதும் பக்தர்கள் காவல்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை வழியாக தங்களது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவை குடும்பத்துடன் கண்குளிர பார்த்து மகிழ்ந்தனர்.
எல்இடி திரைகள்
மேலும், இந்த குடமுழுக்கு விழாவை காண வந்த பக்தர்கள் எந்தவித நெருக்கடி இன்றி காணும் வகையில் கோயில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள், நேரலையில் காண எல்இடி திரைகள் அதே போல் தற்காலிக வாகன நிறுத்துமிடம், பேருந்து நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் 65 எல்இடி திரைகள், 824 கழிப்பறைகள், குடிநீர் மற்றும் உணவு வசதிகளும் செய்யப்பட்டு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 25 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல இலவச பஸ்களை அரசு இயக்கியது.
பக்தர்கள் அனுமதி
மாலை சுமார் 5.30 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்குள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு மேல் விநாயகர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஒரு சப்பரத்திலும், சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும், சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமயில் வாகனத்திலும், வள்ளி, தெய்வானை தங்க மயில் வாகனத்திலும், சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்திலும், சுவாமி நடராஜர் வெள்ளி சப்பரத்திலும், சுவாமி அலைவாயுகந்த பெருமான் பூங்கேடயச் சப்பரத்திலும், சண்டிகேஸ்வர் சிறிய சப்பரத்திலும் எழுந்தருளி நேற்று மாலையில் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.