news Breaking News
clock

திண்டிவனம், தேனியில் ரூ.190 கோடியில் மெகா உணவு பூங்கா: ஸ்டாலின் திறந்து வைத்தார்

திண்டிவனம், தேனியில் ரூ.190 கோடியில் மெகா உணவு பூங்கா: ஸ்டாலின் திறந்து வைத்தார்



சென்னை, அக்.13–


சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.120 கோடி செலவில் திண்டிவனம் மெகா உணவுபூங்கா, ரூ.70 கோடி செலவில் தேனி மெகா உணவுபூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.


பெண் தொழிலாளர்களின் நலன் பேணும் விதமாக, மகளிர் தங்கும் விடுதிகள், பொது வசதிகள், திறன் மேம்பாட்டு வசதிகள், தாய்மார்கள் நலன் காக்கும் பொருட்டு அர்பணிப்புடன் கூடிய குழந்தை காப்பக வசதிகளையும் சிப்காட் நிறுவனம் அமைத்து வருகின்றது.


தேர்வாய்கண்டிகை, வல்லம் வடகால், சிறுசேரி, கும்மிடிப்பூண்டி, கடலூர், பர்கூர், பெருந்துரை, தூத்துக்குடி, நிலக்கோட்டை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம், ஓசூர், கங்கைகொண்டான் ஆகிய 16 தொழில் பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்கள் முதலமைச்சரால் இன்றையதினம் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டன.


இந்த குழந்தைகள் காப்பகங்களை, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தொழில் துறை மகளிர் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கி உள்ளது. தொழில் பூங்காக்களில் பணிபுரியும் பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்களின் குழந்தை பராமரிப்பு சுமையை குறைக்க ஏதுவாக பணிபுரியும் இடத்திற்கு அருகில், பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலமைப்புடன் இக்காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கொள்ளார் மற்றும் பெலாகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 157.91 ஏக்கர் பரப்பளவில் 120 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள திண்டிவனம் மெகா உணவு பூங்காவினையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.


இப்பூங்காவில், 3 தொழிற்சாலைகளுக்கு 36.05 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, 123.84 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 350 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அத்துடன் தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க 55.59 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்திட தயார் நிலையில் உள்ளது.


தேனி மாவட்டத்தில் உப்பார்பட்டி, தப்புகுண்டு மற்றும் பூமலைகுண்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 123.49 ஏக்கர் பரப்பளவில் 70 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள தேனி மெகா உணவு பூங்காவினை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இப்பூங்காவில், 11 தொழிற்சாலைகளுக்கு 45.97 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, 160.53 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 700 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அத்துடன் தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க 27.34 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்திட தயார் நிலையில் உள்ளது.


இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கி.செந்தில்ராஜ், செயல் இயக்குநர் அ.கேத்தரின் சரண்யா, FICCI-FLO அமைப்பின் தலைவர் நியடி மேத்தா, முன்னாள் தலைவர் சி.ஏ. திவ்யா அபிஷேக், எல்.எல்.ஓ. அமைப்பின் முன்னாள் தலைவர்கள் சுதா ஷிவ்குமார், கவிதா தத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News