தாலாட்டு

தாலாட்டு


இன்னமும்கூட அம்மா

அப்படியேதான் இருக்கிறாள் மாறாது..


அறுந்துபோன செருப்பை

தைத்துக்கொள்வதும்

எவருமறியாது கிழிசலை

மறைத்துக்கொள்வதுமென

அப்படியேதான் இருக்கிறாள் அம்மா..


அன்றைக்குப்போலவே வலிகளை

வெளிச்சொல்வதில்லை இப்போதும்..


தனக்கான தேவைகளை

அவள் பெருக்கியதேயில்லை

சுருக்கியேயிருக்கிறாள் எப்போதும்..


வயதின் அடையாளங்கள்

அவளை சுருங்க வைத்தபோதும்

விழிகளில் இன்னமும்

மீந்துகிடக்கிறது

என்மீதான அன்பின் ஒளி..


தினம் அவள் வேண்டிக்கிடப்பது

கொஞ்சம் வெற்றிலைபாக்கும்

சிறு புகையிலைத்துண்டும்தான்..


ஆளரவமில்லா அறையில்

அருகில் எவருமில்லாது

முதுமையின் துணையோடு

அவள் தனித்திருத்தலென்பது

நடுநசியில் திடுமென என்னை

விழிப்புற வைத்து வலிசெய்யும்..


அன்றாடம் என்னை பார்த்துவிடுவதும்

அன்போடு சிலவார்த்தை பேசிவிடுவதுமே

அவளின் குறைந்தபட்ச நிம்மதி..


துடிப்பினோசை துயலக்கூடும்

அவளின் இருப்பின் வாசம் மறையக்கூடும்

இயல்புதான் நிகழ்வது..


அதற்குமுன் அவளின்

அருகாமை உறைவதும்

அவள் மடிமீது துயில்வதும்

பேராசை எனக்கு..


சிறுதுளி விழிநீரும்

சிந்தாது சிதறாது

அவள் வலிமீது மருந்தாக

துயர்போக்கும் துணையாக..


தோல்சுருங்கி நடுங்கும் 

அவள்விரல் பற்றி

தோள்சேர்த்து மார்சேர்த்து

குழந்தைபோல் பார்த்திடவே

ஏங்கி மனம் விம்முகிறது..


இன்னுமோர் யுகம்

நீ என்னோடு வாழ்ந்துவிடு..


இம்மண்ணுலகம் நீங்காது

என்னோடு இருந்துவிடு..


கடவுளிடம் யாசிப்பதெல்லாம்

இன்னும் கொஞ்சகாலம்

அவளை என்னிடமே விட்டுவிடு..


கனவுகளை நிஜமாக்கி

அவள் கையருகில் கொடுக்கவேண்டும்..


அவள் நினைவுகளை மகிழ்வாக்கி

என் சிறுகூட்டில் அடைக்கவேண்டும்..


ஜென்மங்கள் எப்போதும்

என் தாய்மடியில் உறங்கவேண்டும்..


அம்மா..


இன்னமும் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது..


நடுநசி மத்திமத்தில் தினம்

எனக்கான உன் தாலாட்டு..!


ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%