ஆமதாபாத், ஜன.
குஜராத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஜெர்மனி பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது வளாகங்களை திறக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
ஜெர்மனியின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெட்ரிக் மெர்ஸ், 2 நாட்கள் பயணமாக நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்தார். ஆசிய கண்டத்துக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.
பிரதமர் மோடி-–ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஒட்டுமொத்த இருதரப்பு உறவை விரிவுபடுத்துவது பற்றி பேசினர். ரஷியா-–உக்ரைன் போர், காசா நிலவரம் மற்றும் இதர சர்வதேச சவால்கள் பற்றி விவாதித்தனர்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதி தீர்வு காண்பதை இந்தியா எப்போதும் ஆதரித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். உயர்கல்வி துறையில் ஒத்துழைப்புக்கான விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. ஜெர்மனி பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது வளாகங்களை திறக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்தியக் குடிமக்களுக்கு விசா இல்லாத பயண வசதியை அறிவித்ததற்காக அதிபர் மெர்ஸுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டறிக்கை
தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. பயங்கரவாதிகளின் புகலிடம் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிப்பதற்கு அனைத்து நாடுகளும் பணியாற்ற வேண்டும். சர்வதேச சட்டங்களின்படி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வது உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் தடையற்ற மற்றும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், இந்த கூட்டறிக்கையில், இந்தியா மத்திய கிழக்கு- ஐரோப்பிய இடையிலான பொருளாதார வழித்தடம், உக்ரைன் விவகாரம், காசா அமைதி திட்டம், பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அறிக்கை
இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆமதாபாத்தில் ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸை வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது இந்திய வருகை, இந்தியா– ஜெர்மனி இடையிலான உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசியாவில் தனது முதல் பயணத்திற்கான இடமாக அவர் நமது நாட்டை தேர்வு செய்ததில் இந்தியா பெருமை கொள்கிறது. இது வலுவான இந்தியா–ஜெர்மனி உறவுகளுக்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பிற முக்கியமான வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்புடன் நமது உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். காலநிலை நடவடிக்கை, நம்பகமான மற்றும் மீள்தன்மை கொண்ட விநியோக சங்கிலி திறன் மேம்பாடு மற்றும் கல்வி குறித்தும் விவாதித்தோம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
19 ஒப்பந்தங்கள்
இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பை தொடர்ந்து 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி, முக்கிய கனிமங்கள், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டன.
ஜெர்மனியை கடந்து செல்லும்போது, இந்தியர்கள் விசா இல்லாமல் ஜெர்மனியை கடந்து செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தமும் இவற்றில் அடங்கும். உயர்கல்வி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஜெர்மனி துணை தூதரகம் திறப்ப தற்கான ஒரு ஒப்பந்தமும் அடங்கும். ஐதராபாத்தில், தேசிய திறன் பயிற்சி நிலையத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் சீர்மிகு திறன் மையம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் உள்ளது.
அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனத்துக்கும், ஜெர்மனி சாரிட் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புக்காக கையெழுத்தான ஒப்பந்தமும் அடங்கும்.