ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழப்பு


 

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக ராணுவ வாகனம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. குண்டு துளைக்காத இந்த வாகனத்தில் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர்.


இந்நிலையில் பதேர்வா-சம்பா சாலையில், 9,000 அடி உயரம் உள்ள கன்னி டாப் பகுதியில் செல்லும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த வாகனம் உருக்குலைந்தது.


மோசமான வானிலை: விபத்து குறித்து ராணுவத்தின் ஒயிட்நைட் படைப் பிரிவு வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவில், ‘ஒரு ராணுவ நடவடிக்கைக்காக துருப்புகளை ஏற்றிச் சென்ற வாகனம் தோடாவில் ஆபத்தான நிலப்பரப்பில் பயணித்தபோது மோசமான வானிலை காரணமாக சாலையில் இருந்து தவறிவிழுந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.


விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்தில் ராணுவம் மற்றும் காவல் துறையினர் உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் 4 வீரர்கள் சடலமாகவும் 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவீரர்கள் பதேர்வா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 10 ஆகஉயர்ந்தது. 11 வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தலைவர்கள் இரங்கல்: விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர்கள் குலாம் நபி ஆசாத், மெகபூபா முப்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தோடாவில் நடந்த துயரச் சம்பவத்தால்மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இதில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் சிலரை நாம் இழந்துவிட்டோம். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சர் அமித்ஷா ‘எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் நடந்த சாலை விபத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் நாம் இழந்த வீரத் தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்த வீரர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வீரர்களும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%