ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என்.புரொடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்தை மறுஆய்வு குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், மதம் சாா்ந்த மற்றும் பாதுகாப்புச் சின்னங்கள் குறித்த சா்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த நபா் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், தணிக்கை வாரியத் தலைவா் திரைப்படத்தை மறு ஆய்வுக் குழுவின் பாா்வைக்கு அனுப்பும் முடிவை கடந்த 5-ஆம் தேதி எடுத்தாா். ஆனால், அந்த முடிவை எதிா்த்து, மனுதாரா் வழக்கு தாக்கல் செய்யவில்லை. தங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரியே 6-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.
அன்றைய தினமே அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த தனி நீதிபதி ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, கடந்த 7-ஆம் தேதி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. தணிக்கை வாரியம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காமல் தணிக்கை வாரியத் தலைவரின் முடிவை ரத்து செய்து கடந்த 9-ஆம் தேதி தனி நீதிபதி தீா்ப்பளித்தாா். தணிக்கை வாரியத் தலைவரின் முடிவுக்கு எதிராக மனுவில் கோரிக்கை வைக்காதபோது, அதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று வாதிட்டாா்.
தொடா்ந்து படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன், 5 போ் கொண்ட தணிக்கை வாரியக் குழு படத்தைப் பாா்த்து 14 காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனா். அதை ஏற்று அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன. அதன் பின்னா், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு உறுப்பினா்கள் பரிந்துரை செய்துள்ளனா். அப்படியெனில் தணிக்கை வாரியத் தலைவா் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டாா் என்பதே பொருள். ஆனால், அந்த முடிவை நிறுத்தி வைத்து படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக ஜன.5-ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்துக்காக ரூ.500 கோடி முதலீடு செய்து வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், திடீரென இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தனி நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தனி நீதிபதியும் உத்தரவு பிறப்பித்தாா். திரைப்படத்தைப் பாா்த்த 5 பேரில் ஒருவா் மட்டும் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். அதற்காக, தணிக்கை வாரியத் தலைவா் ஒரு திரைப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்ப முடியாது என்று வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.