சபரிமலையில் பருப்பு, பப்படம், பாயாசத்துடன் கேரள பாரம்பரிய மதிய விருந்து தொடக்கம்
சபரிமலை: சபரிமலையில் பருப்பு, பப்படம், பாயாசத்துடன் கூடிய கேரள பாரம்பரிய விருந்தாக மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது.
சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது. மதியம் ஐந்தாயிரம் பேர் இங்கு உணவு சாப்பிடுகின்றனர். இதுவரை இங்கு மதியம் புலாவு மற்றும் வெரைட்டி ரைஸ் வழங்கப்பட்டு வந்தது.
திருவிதாங்கூர் தேவசம்போர்ட்டின் தலைவராக பொறுப்பேற்ற கே.ஜெயக்குமார் அன்னதானத்தில் மதியம் பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய விருந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு நேற்று இந்த திட்டம் துவங்கப்பட்டது.
மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் பருப்பு, சாம்பார், ரசம், அவியல், துவரன், ஊறுகாய், பப்படம், பாயசம் ஆகியவற்றுடன் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
இதனை சபரிமலை செயல் அலுவலர் ஓ.ஜி.பிஜூ குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கேரள பாரம்பரிய விருந்து இலையில் வழங்கப்படுவது தான் மரபு. ஆனால் தினமும் ஐந்தாயிரம் இலைகள் கொண்டு வருவதில் உள்ள சவால்களை கருத்தில் கொண்டு புதிதாக பிளேட்டுகள் வாங்கப்பட்டு தற்போது பரிமாறப்படுகிறது.
சபரிமலை வரும் பிற மாநில பக்தர்களும் கேரள பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த விருந்து அமையும் என பிஜு கூறினார்.
இந்த சீசனில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த விருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் சன்னிதான சுற்றுப்புறங்களில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை முடிவில் ரூ.98 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பழைய உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்ததும், எடை குறைவாக உணவு வழங்கியதும், சுகாதாரம் இல்லாமல் ஓட்டல் நடத்தியதற்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?