சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Jul 28 2025
14

சங்கரன் கோவில், ஜூலை 29-
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.
கொடியேற்றம்
இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு 2.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. கோமதி அம்மன் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 3.30 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. பின்னர், காலை 4.41 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜா, கடம்பூர் ராஜு, இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட குழு உறுப்பினர் தங்கவேலு, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கோவில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகையா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவில் கோமதி அம்மன் வீதியுலா நடக்கும். விழாவின் 9-ம் நாளான ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 8.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.
ஆடித்தபசு
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தவசு 11-ம் திருநாளான ஆகஸ்ட் 7-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்மனுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தவசு மண்டகப்படியில் எழுந்தருளி தவமிருக்கும் வைபவம் நடைபெறும். அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயண சுவாமியாக சிவபெருமான் ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு மேல் நடைபெறும். அன்று இரவு 11.30 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?