கேலோ விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா: கோவை மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு
Dec 28 2025
14
கேலோ விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் கோவை மாணவியுடன், பிரதமர் மோடி காணொலி காட்சியில் கலந்துரையாடி, பாராட்டு தெரிவித்தார்.
மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ‘சன்சாத் கேல் மகோத்சவ்’ விளையாட்டு போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்றது. இதன் நிறைவு விழா பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார்.
முன்னதாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் டாக்டர் பி.எம்.கே. ஜூபிலி ஹாலில் நடைபெற்ற விழாவை மத்திய மந்திரி எல்.முருகன், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதற்கிடையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளிடையே பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது கபடி மற்றும் சைக்கிளிங் போட்டியில் மாநில, தேசிய அளவில் சாதித்து வரும் கோவை பள்ளி பிளஸ்-1 மாணவி நேஷிகாவுடன் கலந்துரையாடினார். அதன் விவரம் வருமாறு:-
பிரதமர் மோடி: வணக்கம், உங்களை பற்றி கூறுங்கள்.(அப்போது தமிழில் வணக்கம் என கூறினார்)
மாணவி நேஷிகா: எனது பெயர் நேஷிகா. பிளஸ்-1 படிக்கிறேன். சைக்கிள் போலோ மற்றும் கபடி என 2 போட்டிகளில் விளையாடி வருகிறேன். அதில் கபடி எனக்கு பிடித்தமான ஒன்று.
பிரதமர் மோடி: எப்படி 2 விளையாட்டுகளையும் நிர்வாகம் செய்கிறீர்கள்?.
மாணவி நேஷிகா: பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மாலை பள்ளி முடிந்ததும் சுமார் 1 மணி நேரம் பயிற்சிக்காக ஒதுக்குகிறேன். இந்த விளையாட்டு திருவிழாவானது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. எங்களது திறமைகளையும் வளர்க்கிறது.
பிரதமர் மோடி: உங்களுக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
இவ்வாறு கலந்துரையாடல் நிறைவு பெற்றது.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?