குறும்புக்காரன்

குறும்புக்காரன்


 பாபு ஒரு குறும்புக்கார பையன். கிராமத்தில் வசிப்பவன். எப்பொழுதும் யாரையாவது அடித்து விடுவான், பொருள்களை உடைத்து விடுவான், ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருப்பான். அவனுடைய வீடு பஸ் ஸ்டாப்பில் இருந்து கிராமத்திற்கு உள்ளே சற்று தொலைவில் உள்ளது .அவருடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும் . வழியில் பெரிய மாந்தோப்பு உள்ளது. அந்த வழியில் தான் தினமும் பாபு பள்ளிக்குச் செல்வான். மாந்தோப்பில் நிறைய மாங்காய்கள் காய்த்து தொங்கியது. பள்ளியிலிருந்து போகும்போதும், பள்ளியை விட்டு வரும்போதும் அந்த மாங்காயை பார்த்தான். சாப்பிடுவதற்கு ஆசை கொண்டான். அதனால் ஒரு நாள் அந்த மாங்காயை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது .மறுநாள் பள்ளியை விட்டு வரும்போது அவன் மாங்காய் பறிப்பதற்காக சென்றான் .ஆனால் கேட் மூடப்பட்டிருந்தது. உள்ளே தோட்டக்கார தாத்தா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் .பாபு மெதுவாக கேட்டின் மேலே ஏறி உள்ளே குதித்தான் .சத்தம் கேட்டு தாத்தா யாருடா அது என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்து அவனை பிடித்தார். உன் பெயர் என்ன? என்று கேட்டார் .அவன் பயந்து போய் பாபு என்றான் .சரி இனிமேல் இப்படி கேட்டின் மீது ஏறி குதிக்க கூடாது .சரியா? போ வீட்டுக்கு என்று மிரட்டி அனுப்பி விட்டார். பாபுவும் ஓடி வந்துவிட்டான் .மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது, பாபுவின் கண் அந்த மாங்காய் மீது விழுந்தது .அன்று முழுவதும் பள்ளியில் மாங்காயை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது .பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் போது நேராக அந்த மாந்தோப்பின் கேட்டிற்கு வெளியே வந்து நின்றான். அப்பொழுது கேட் திறந்திருந்தது .உடனே உள்ளே மெதுவாக சென்று மரத்தின் மீது ஏறி மாங்காய் பறிக்கச் சென்றான் .அவனுக்கு எட்டவில்லை. கீழே இறங்கி ஒரு கல்லை எடுத்து மாங்காயை பார்த்து எறிந்தான். அந்த கல் மாங்காய் மீது படவில்லை ,ஆனால் தோட்டத்துக்கார தாத்தாவின் மேல் பட்டது .வலியால் துடித்த தாத்தா டேய் யார்ரா ? என்றார் .பாபு ஓடினான் .தாத்தா பார்த்துவிட்டார். நில்லுடா... நில்லுடா... என்று கத்திக் கொண்டே அவரும் ஓடி வந்தார் .ஆனால் பாபு சிக்காமல் வீட்டிற்கு ஓடி வந்து விட்டான். தாத்தாவிற்கு அதிக கோபம் வந்தது. வேலையை முடித்துவிட்டு சாயங்காலம் பாபுவின் வீட்டிற்கு வந்து தாத்தா அவனுடைய அம்மாவிடம் உங்கள் பையன் கல்லால் என்னை அடித்து விட்டான் பாருங்கள். எப்படி வீங்கி உள்ளது என்றார் கோபமாக, அவனை கண்டித்து வையுங்கள் என்று சொன்னார் .பாபுவின் அம்மாவும் பாபுவை அழைத்து இனிமேல் இதுபோல் செய்யக்கூடாது என்று கண்டித்தார் .அடுத்த நாள் சனி பள்ளி விடுமுறை நாள். ஊரிலிருந்து பாட்டி வருகிறார் அதுவும் பலகாரத்துடன் என்று அம்மா கூறினார். பாபுவிற்கு ஒரே குஷி. இருந்தாலும் பாட்டி வருவதற்குள் அந்த மாங்காயை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் மாந்தோப்பிற்கு சென்றான். கீழே கிடந்த கொம்பை எடுத்து அடித்தான் மரம் அசைந்து இரண்டு மூன்று மாங்காய்கள் சாலையில் விழுந்தது. தாத்தா உள்ளே இருந்து கொண்டே சத்தம் போட்டார் .பயத்தில் மீண்டும் ஓடி வந்து விட்டான் பாபு. வீட்டிற்குள் சென்று படுத்தான் அப்படியே தூங்கிவிட்டான். பாட்டியும் ,கோபுவும் பஸ்ஸை விட்டு இறங்கி ஊருக்குள்ளே வந்து கொண்டிருந்தார்கள். பாட்டி முன்னே நடந்து போய்க்கொண்டிருந்தாள் .பின்னால் வந்த கோபு மாமரத்தில் இருந்து கீழே விழுந்த மாங்காயை பார்த்து இரண்டு கைகளிலும் எடுத்துக் கொண்டான். அண்ணாந்து மாமரத்தை பார்த்தான் ஆஹா எவ்வளவு காய்கள் காச்சிருக்கு என்று பார்த்தபடியே நின்றிருந்தான் .பாட்டி வெகு தூரம் போய்விட்டாள். அப்பொழுதுதான் தோட்டக்கார தாத்தா கேட்டை சாத்திவிட்டு வெளியே வந்தார். கையில் மாங்காயுடன் இருந்த கோபுவை பார்த்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டாயா ?என்று பிடித்து பளார்,பளார் என்று இரண்டு அடி அடித்து விட்டார். பின்பு கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே பாபு வீட்டிற்குச் சென்று சத்தம் போட்டார். வெளியே வந்த பாபுவின் அம்மா என்ன சத்தம் போடுகிறீர்கள்? என்றாள்.பாபு இன்றைக்கும் மாந்தோப்பிற்கு வந்து மாங்காயை திருடி இருக்கிறான். அவனை இரண்டு அடி அடித்து கையோடு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறேன் என்றார் .அதற்கு பாபுவின் அம்மா அவன் இவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் பாட்டி ஊரிலிருந்து வந்திருக்கிறார் அவன் அவர்களுடன் இனிப்பு, பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். நீங்களே உள்ளே வந்து பாருங்கள் என்றாள். தாத்தாவும் உள்ளே வந்து பார்த்தார் அவருக்கு ஒரே அதிர்ச்சி !!உள்ளே பாபு பாட்டியுடன் இருந்தான். அப்பொழுது நான் அழைத்து வந்த பையன் யார்? என்று வெளியே வந்து பார்த்தார். இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை சொரிந்து கொண்டு விழித்தார். வெளியே வந்த பாட்டி கோபுவிடம் நீ மாங்காயை திருடினாயா ?என்று கேட்டார் .அதற்கு கோபு இல்லை பாட்டி நடந்து வரும் வழியில் கீழே விழுந்து கிடந்தது. அதைத்தான் நான் எடுத்துக் கொண்டேன். நான் திருடவில்லை என்று சொன்னான். அப்பொழுது பாபுவின் அம்மா வெளியில் வந்து வா கோபு ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறாய்? என்றாள்.கோபுவின் கைகளில் மாங்காயை பார்த்தாள்.தோட்டக்கார தாத்தா இதோ பாருங்கள் பாபு என்றார். பாட்டி சிரி த்தப்படியே பாபுவும், கோபுவும் இரட்டையர்கள் கோபு என்னுடன் ஊரில் இருக்கிறான் இப்பொழுது தான் நாங்கள் வந்தோம் என்றாள்.தாத்தாவிற்கு அப்பொழுதுதான் உண்மை புரிந்தது நான் தான் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்றார். தவறு செய்தவன் ஒருவன், தண்டனை பெற்றது வேறொருவன். கோபு என்னை மன்னித்து விடப்பா என்று மன்னிப்பு கேட்டார். மாங்காயையும் பரிசாக கொடுத்து விட்டார்.



எம் .எல் .பிரபா,

ஆதம்பாக்கம்,

சென்னை 88

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%