கீரனூர் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள், கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட பாலாண்டாம்பட்டி ஊராட்சி, வடக்கு பாரப்பட்டியில் ஒரு பாறையின் மேலே சண்டிகேஸ்வரர், பைரவர், நந்தி சிலைகள் மற்றும் ஒரு கல்வெட்டு தென்பட்டது. இதையடுத்து, பாலண்டாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தகவலின்படி, தொல்லியல் ஆய்வாளர் கீரனூர் முருகபிரசாத் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.
இதில், மேற்காணும் சிலைகள் மற்றும் கல்வெட்டு 9-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், அந்த கல்வெட்டில், ''ஸ்வஸ்திஸ்ரீ இக்கிணறும், இம்மாவும், இப்புஞ்சையும்'' என ஆரம்பிக்கப்பட்டு, அந்த கல்வெட்டு உடைந்து போய் இருந்தது. மீதமுள்ள பாகம் கண்டறியப்பட்டால் அந்த ஊரின் மொத்த வரலாறும் தெரிய வரும்.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொக்லைன் எந்திரத்தை கொண்டு கிளறி பார்த்ததில், பொற்பனைக்கோட்டைக்கு இணையான செங்கற்களை கொண்ட கட்டுமானமும், ஒரு கற்றளி (கற்களால் கட்டப்பட்ட கோவில்) இருந்ததற்கான சேதமடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. மேலும் மிகப்பெரிய பொருட்செலவில், அந்தப் பாறையின் மேலே செல்ல பாதை அமைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து புதிதாக கண்டறியப்பட்ட சிலைகள் மற்றும் கல்வெட்டை பார்த்து செல்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பகுதியில் ஒரு பெரிய நடுகல்லும், மருங்கிப்பட்டியில் கல்வெட்டும் இருப்பது 'தினத்தந்தி'யில் செய்தியாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வடக்கு பாரப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில், தொல்லியல் தடயங்கள் கிடைத்த வண்ணம் இருப்பதால், புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் துறை அதிகாரிகள், இப்பகுதியில் கள ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?