அனுவுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை. அப்பா இருந்தும் இல்லாத வாழ்க்கையும், அம்மா இல்லாத வெறுமையும் அவளை
“யாரையும் முழுசா நம்பாதே”
என்று கற்றுக் கொடுத்திருந்தது.
ஐ.டி. கம்பெனியில் வேலை. நகர வாழ்க்கை. வேகமான ஓட்டம் இருந்தும்
அவள் மனதில் ஒரு நிதானமான சோர்வு.
அதனால்தான் அந்த முதியோர் இல்லத்துக்கு தினமும் டிபன் வண்டியுடன் வருகிறாள்.
சாப்பாடு கொடுப்பது என்பது நேரடிக் காரணமாய் இருந்தாலும், தனிமைக் கொடுமையிலிருந்து நீங்கும் தற்காலிகச் சுதந்திரமே உண்மைக்காரணமென்று அவளுக்குத் தெரியும்.
முதியோர் இல்லத்தில் அவள் பார்த்த அதிசயப் பிறவிகள்தான் ராமசாமியும், மீனாட்சியும்.
காதலர்கள் போல இல்லை, கணவன், மனைவி போலவும் இல்லை. ஆனால்
ஒருவரின் மூச்சை மற்றொருவர் கவனிக்கும் ஒரு உன்னத உறவு.
மீனாட்சியின் மருந்து நேரத்தை
தனக்குத் தெரியாமல்
மனப்பாடம் செய்திருந்தார் ராமசாமி.
அவருக்குப் பிடிக்காத உணவை
அனுவிடம் சொல்லி மாற்றிக் கொடுப்பாள் மீனாட்சி.
ஒரு நாள் அனு கேட்டாள், "தாத்தா…
இந்த வயசுல கூட இப்படியொரு பாசம்
எப்படி வருது?”
ராமசாமி சிரித்தபடியே சொன்னார், “காதல்.. கத்தரிக்காயெல்லாம் எதுவும் இல்லைம்மா… இருக்கறவனை
விட்டுப் போக மனசு வரல…அதுதான்.”
அந்த பதில் அனுவை உள்ளுக்குள் குலுக்கியது.
அவள் வாழ்க்கையில் வந்து போன ஆண்கள் இப்போது அவள் நினைவில் வந்து போனார்கள்.
வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால்
மறந்து போனார்கள்.
ஒரு மழைக்கால மாலையில்
மீனாட்சிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
மீனாட்சியின் கைகளைப் பற்றிய ராமசாமி அழவில்லை. உடையவும் இல்லை.
சன்னமாய் மீனாசியின் காதருகே சென்று, “நான் இங்கதான் இருக்கேன்”
என்று மட்டும் சொன்னார்.
அந்த ஒரு வரியில் அனு புரிந்து கொண்டாள், "காதல் என்றால்
விட்டுப் போகாத மனங்களே"
இருபது நாட்களுக்குப் பிறகு,மீனாட்சி மருத்துவமனயிலிருந்து திரும்பி வந்த போது, ராமசாமி இல்லை.
ஏனோ அவரது மறைவை மருத்துவமனையிலிருந்த மீனாட்சிக்கு தெரியப்படுத்தவில்லை.
மீனாட்சிக்கு அது தெரியும் போது அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
அழவில்லை. அவள் கண்களில்
கண்ணீரில்லை. ஆனால் ஒரு நிறைவு இருந்தது.
அன்று அனு ஆபீஸுக்குப் போகவில்லை. "காதல்
இளம் வயசுல தான் வரணும்னு
எங்க எழுதிருக்கு?” அவள் மனசு கேட்டது.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?