ஐயோ எரியுதே ... எரியுதே

ஐயோ எரியுதே ... எரியுதே


அந்த ஜவுளிக்கடை வாசலில் அமர்ந்திருந்த மெஹந்திக்காரனிடம் சென்ற தீபக் எடுத்த எடுப்பில் இரண்டு 500 ரூபாய்த்தாளை நீட்டினான்.


   "சார்... இது எதுக்கு?"


  "இன்னும் கொஞ்ச நேரத்துல மஞ்சள் கலர் சுடிதார் போட்டுக்கிட்டு ஜவுளி கடைக்குள்ளிருந்து ஒருத்தி வருவா... கைல ரோஸ் கலர் பேக் வெச்சிருப்பா.. அவ மெஹந்தி போட உன் கிட்ட வருவா... அவளுக்கு இதோ... இந்த மெஹந்தி கோனைப் போட்டு விடு!" சட்டைப் பாக்கெட்டிலிருந்து அமிலம் கலந்த மெஹந்தி கோனை எடுத்துத் தந்தான் தீபக்.


   "சார்... இதுல...?" அவன் தயங்க,


 இன்னொரு 500 ரூபாய்த்தாளை நீட்டிய தீபக், "எதுவும் கேட்கக் கூடாது... சொன்னதை மட்டும் செய்!... நான் அதோ எதிர்த்தாப்புல இருக்கிற அந்த டீக்கடையில் உட்கார்ந்து உன்னை நோட் பண்ணிட்டே இருப்பேன்!... ஏமாத்திடலாம்னு மட்டும் நினைச்சிடாதே" சொல்லி/விட்டு எதிரே இருந்த டீக்கடையில் சென்று அமர்ந்தான் தீபக்.


   "அடியே பூமிகா... என்னோட காதலையா ஏத்துக்க மறுக்கிறே?.. இன்னும் கொஞ்ச் நேரத்துல மெஹந்தி போட்டதும் " ஐயோ...எரியுதே... எரியுதே!"ன்னு கத்துவியே... அப்ப நான் வருவேன்... உன்னை ஆட்டோவில் தூக்கிப் போட்டுட்டு.. ஆஸ்பத்திரில கொண்டு போய்ச் சேர்ப்பேன்!... நீயா என் காதலை ஏற்றுக்கிற மாதிரி செய்வேன்!" உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் தீபக்.


பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்த மாஸ்டர், "சார்... சூடா பஜ்ஜி இருக்கு!" என்று சொல்ல, "ஒண்ணு கொடுப்பா!" என்றான் தீபக்.


ஜவுளி கடைக்குள்ளிருந்து வெளியே வந்த பூமிகா, தீபக் நினைத்ததைப் போலவே மெஹந்திக்காரனிடம் சென்றாள். அவளது மஞ்சள் நிற சுடிதாரையும், ரோஸ் நிற பேக்கையும், பார்த்து அடையாளம் புரிந்து கொண்ட மெஹந்திக்காரன் மெல்லத் தன் பார்வையை தீபத்தை நோக்கித் திருப்ப, அவன் மேலும் கீழும் தலையை ஆட்டி காட்டி விரலை உயர்த்தி காட்டினான்.


   "கடவுளே... அவன் கொடுக்கிற 1500க்கு ஆசைப்பட்டு இந்த மெஹந்தியைப் போட்டு விட்டு ஏதாவது பிரச்சனை வந்திடுமோ?" தயங்கினான் மெஹந்திக்காரன்.


எதிர் டீக்கடையிலிருந்து விழிகளை விரித்து, ஆட்காட்டி விரலை காட்டி மிரட்டினான் தீபக்.


அப்போது தான் அது நிகழ்ந்தது.


சாலையில் படு வேகத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பைக்காரன், கட்டுப்பாடிழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்களின் மீது மோதி, அதே வேகத்தில் டீக்கடையின் மீதும் மோதி நிற்க.


பஜ்ஜி தயாரிப்பதற்காக பெரிய வாணலியில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் அப்படியே சாய்ந்து மொத்தமாய் தீபத்தின் முகம், நெஞ்சு, கைகால் என எல்லாப் பகுதிகளுக்கும் பரவ,அலறினான்.


   "ஐயோ... எரியுதே! ஐயோ... எரியதே"


    எதிர்ப்புறமிருந்து அதைப் பார்த்த மெஹந்திக்காரன், தீபக் கொடுத்த அந்த அமில மெஹந்திக்கோனை சட்டென்று பக்கத்திலிருந்த சாக்கடையில் வீசினான்.


மெஹந்திக்காரன் பக்கத்தில் நின்றிருந்த பூமிகா அங்கே நடந்து கொண்டிருந்த களேபரத்தையும், தீபக்கின் அலறலையும் கேட்டுப் பாய்ந்து வந்தாள்.


வந்ததும் நிலைமையை யூகித்து விட்டவள், அவசர அவசரமாய் ஒரு ஆட்டோப் பிடித்து, பிறர் உதவியுடன் தீபக்கை அதில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தாள்.


மெஹந்திக்காரன் திகைத்தான்.


(முற்றும்)



முகில் தினகரன் 

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%