இ.எஸ்.ஐ, பி.எப்., ஊதிய உயர்வு வேண்டும் செப்.23-இல் பஞ்சாலை தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 16 - தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் எம். சந்திரன் தலைமையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஆர்.வெங்கடாசலம், மாநில உதவித் தலைவர் எஸ்.தனபால் உட்பட நிர்வாகிகள் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் எம்.அசோகன், நடந்த பணிகள் குறித்த வேலை அறிக்கையை முன் வைத்தார். வரவு- செலவு அறிக்கையை பொருளாளர் எஸ்.சக்திவேல் முன்வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவரும், விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவருமான பள்ளிப்பாளையம் எம்.அசோகன் வாழ்த்திப் பேசினார். திண்டுக்கல்லில் நடைபெற்ற 9 ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், செப்டம்பர் 23 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய அரசு தேசிய பஞ்சாலைகளை இயக்க வேண்டும். கூட்டுறவு பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். பயிற்சியாளர்களுடைய தினசரி ஊதியம் ரூ.552-க்கு குறைவில்லாமல் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். 2024-25 ஆம் ஆண்டுக்குரிய போனஸ் 20%, ஊக்கத்தொகை 10% வழங்க வேண்டும். அரசு அறிவிக்கிற போனஸ் தொகையை குறைவின்றி, தினக்கூலி தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை, விலைவாசி புள்ளி உயர்வு மட்டுமே இருக்கிறது. பல பஞ்சாலைகளில் அதுவும் வழங்கப்படுவதில்லை. குறைந்தபட்ச கூலியை பஞ்சாலை தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியை வழங்குவதற்காக நிச்சயிக்கப்பட்ட கமிட்டி செயல்படாமல் நின்று விட்டது. ஆகையால் கமிட்டியை மீண்டும் அமைத்து, அதன் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும். பி.எப், இ.எஸ்.ஐ அனைவருக்கும் பிடித்தம் செய்யப்பட வேண்டும். ஓய்வுபெற்ற ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கக் கூடிய இபிஎப் பென்சன் குறைந்தபட்சம் மாதம் ரூ. 9000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.23 ஆம் தேதி மாநிலம் முழுவதும் இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?