மெல்போர்ன், நவ.1-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 125 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்து. 82,438 ரசிகர்கள் குவிந்ததால் ஏறக்குறைய மைதானம் நிரம்பி வழிந்தது.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில்பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி அபிஷேக் ஷர்மாவும், சுப்மன் கில்லும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டதுடன், வேகத்துக்கு உகந்த வகையில் நன்கு பவுன்சும் ஆனது. அதை நேர்த்தியாக பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். சுப்மன் கில் (5 ரன்) அவர் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சஞ்சு சாம்சனை (2 ரன்) நாதன் எலிஸ் வெளியேற்றினார்.
தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1 ரன்), திலக் வர்மா (0) ஆகியோர் ஹேசில்வுட்டின் ஒரே ஓவரில் விக்கெட் கீப்பர் இங்லிசிடம் சிக்கினர். இதனால் 32 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திண்டாடியது. அக்ஷர் பட்டேலும் (7 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா நிலைத்து நின்று தனக்கே உரிய பாணியில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவருக்கு ஹர்ஷித் ராணா நன்கு ஒத்துழைப்பு தந்தார்.
அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் தனது 6-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 15 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது எப்படியும் ஸ்கோர் 150-ஐ தாண்டும் என்றே தோன்றியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் மறுபடியும் இந்தியா சீர்குலைந்து போனது. ஹர்ஷித் ராணா 35 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அபிஷேக் ஷர்மா தனது பங்குக்கு 68 ரன்கள் (37 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் எல்.டபிள்யூ. ஆனார்.
முடிவில் இந்தியா 18.4 ஓவர்களில் 125 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அபிஷேக், ஹர்ஷித் ராணா தவிர இந்திய அணியில் வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 4 ஓவர்களில் 13 ரன் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். நாதன் எலிஸ், சேவியர் பார்லெட் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
அடுத்து 126 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்சும், டிராவிஸ் ஹெட்டும் (28 ரன்) முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் (4.3 ஓவர்) திரட்டி வெற்றிப்பாதையை எளிதாக்கினர். மார்ஷ் 46 ரன்களும் (26 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), அடுத்து வந்த ஜோஷ் இங்லிஸ் 20 ரன்களும் விளாசினர். இதன் பிறகு சில விக்கெட்டுகளை இழந்தாலும் அதனால் அந்த அணிக்கு பாதிப்பு இல்லை. ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தியது மட்டுமே ஒரே ஆறுதல்.
ஆஸ்திரேலியா 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 40 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஆஸ்திரேலியா இலக்கை எட்டிப்பிடித்தது. அதிக பந்து எஞ்சியிருந்த வகையில் இந்தியாவுக்கு 2-வது மோசமான தோல்வியாக அமைந்தது. ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி ஹோபர்ட்டில் நாளை நடக்கிறது.