ஆன்லைன் செயலியில் பெண் தேடிய இளைஞரிடம் பணம், நகையை பறித்த ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது
Jan 27 2026
37
சென்னை: சபல எண்ணத்தால் ஆன்லைன் செயலி மூலம் பெண் தேடி, ரவுடி கும்பலிடம் சிக்கி இளைஞர் ஒருவர் பணம், நகையை பறிகொடுத்தார். தருமபுரியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் செயலி ஒன்றின் மூலம் தனிமையில் இருக்க பெண் தேடியுள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு வந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், தி.நகர் புதுத் தெருவுக்கு வந்து நிற்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி, தருமபுரி இளைஞர் சென்றுள்ளார். அங்கு வந்த சிலர், அவரை அதே பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று, அறையில் வைத்து பூட்டி சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பணம், நகையை பறித்தனர். மேலும் ஜிபே மூலமும் பணத்தை பறிக்க முயன்றனர்.
ஆனால் ரகசியக் குறியீட்டு எண்ணை அந்த இளைஞர் கூற மறுத்ததால், அவரை சரமாரியாக தாக்கி ஏடிஎம்-க்கு அழைத்துச் சென்று கார்டு மூலம் பணத்தை எடுக்க வைத்து பறித்து விரட்டிவிட்டனர்.
சிசிடிவி கேமரா காட்சிகள்: காயம் அடைந்த இளைஞர் இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா காட்சிகள் துணையுடன் விசாரித்தனர். இதில் தருமபுரி இளைஞரை தாக்கி பணம், நகையை பறித்தது கண்ணம்மாபேட்டையை சேர்ந்த ரவுடி சரவணன் (28), அவரது கூட்டாளிகள் மெக்கானிக் சுதாகர் (19 ), சரண்ராஜ் (21) மற்றும் இரு சிறுவர்கள் என தெரிந்தது.
அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். சபல புத்தியால் சிக்கியவர்களை, கண்ணம்மா பேட்டையில் காலியாக உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பணம் பறிப்பதை ரவுடி சரவணன் தலைமையிலான கும்பல் தொடர்ந்து செய்து வந்ததாகவும், வெளியில் தெரிந்தால் அவமானம் என பெரும்பாலானோர் புகார் கொடுப்பதில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?