அல் ஃபலா குழுமத்தில் கணக்கில் வராத ரூ. 415 கோடி பணம்! அமலாக்கத்துறை

அல் ஃபலா குழுமத்தில் கணக்கில் வராத ரூ. 415 கோடி பணம்! அமலாக்கத்துறை



அல் ஃபலா குழுமத்தின் தலைவர் ஜாவத் அகமது சித்திக்கின் அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ. 415 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


மேலும், ஜாவத் அகமது சித்திக் வளைகுடா நாடுகளுக்கு தப்பிச் சென்று குடியேற திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதின் அல் ஃபலா அறக்கட்டளை, அதன் பல்கலைக்கழக நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் தொடர்புடைய 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.


இந்த சோதனையில் ரூ.48 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும், போலி நிறுவனங்கள் மூலம் பண முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதையடுத்து, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அல் ஃபலா குழுமத் தலைவர் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டு, கூடுதல் அமர்வு நீதிபதி ஷீத்தல் செளத்ரி பிரதானின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.


அப்போது, சித்திக்கின் வழிகாட்டுதல்படி, அல் ஃபலா பல்கலைக்கழகமும், அதன் கீழ் இயங்கும் அறக்கட்டளையும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து முறைகேடாக ரூ. 415 கோடி பணத்தை வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை நீதிபதியிடம் தெரிவித்தது.


மேலும், அவரது நெருங்கிய உறவினர்கள் வளைகுடா நாடுகளில் குடியேறியிருப்பதால், சித்திக்கும் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் அவரை கைது செய்வது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது.


பண முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு முழுமையான உண்மைகளை வெளிக் கொண்டுவர சித்திக்கிற்கு அமலாக்கத்துறை காவல் விதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


இதனை ஏற்ற நீதிபதி, சித்திக்கிற்கு 14 நாள்கள் அமலாக்கத்துறை காவல் விதித்து உத்தரவிட்டார்.


தில்லி கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபி, அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றியவர்.


இதே பல்கலை.யின் பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள்தான் கைது செய்யப்பட்டிருக்கும் மருத்துவர்கள் ஷாஹீன் ஷாஹித், முஸாமில் அகமது.


மேலும், உமரின் நெருங்கிய உதவியாளர்கள் இரண்டு பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. இதில், ஜசீர் பிலாலை 10 நாள்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%