அலட்சியத்திற்கு கிடைத்த பரிசு

அலட்சியத்திற்கு கிடைத்த பரிசு


ஒரு நாள் முல்லா அயல் ஊருக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காகவே ஒரு பொது குளியல் அறை ஒன்று இருந்தது. முல்லா அழுக்கான ஆடையுடன் அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்காமல் அலட்சியமாக நடத்தினர். முல்லாவை சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவசரப்படுத்தினர்.


குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதைக் கண்ட வேலைக்காரர்கள், இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகவே தெரிந்து அவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால் இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பார் என்று நினைத்தனர்.


இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார். வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்டு கொண்டு போட்டி போட்டுக் கொண்டு முல்லா தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள், வாசனைப் பன்னீர், உடல் துவட்ட உயர்தரமான துவாலை, உடலில் பூசிக்கொள்ள வாசனை திரவியங்கள் கொடுத்து ராஜ உபசாரம் செய்தனர்.


அன்றைய தினம் முல்லா தங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது நிச்சயம் அன்பளிப்பாகக் கொடுப்பார் என்று வேலைக்காரர்கள் எதிர்பார்த்தனர். முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசு மட்டும் தான் கொடுத்தார்.


இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு? என்று கேட்டனர். முல்லா, அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார்.







 



கழுதையால் கிடைத்த பாடம்


ஒரு நாள் ராஜாவின் நண்பர் ஒருவர் ராஜாவை பார்க்க அவரது வீட்டிற்கு வந்தார். ராஜா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள். கழிந்ததும் திருப்பி தந்து விடுகிறேன் என்றார் நண்பர்.


அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்று கழுதைக்கு சரியான உணவளிக்காமல் பட்டினிப்போட்டிருந்தார். அதேபோல் சொன்னமாதிரி கழுதையை திருப்பி தருவதும் இல்லை.


அதனால் ராஜா, நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் என்றார். சரி நான் வேறு யாரிடமாவது கேட்டுப் பார்க்கிறேன் என்று சொல்லி நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் பார்த்து ராஜாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதையின் கத்தும் குரல் கேட்டது.


ராஜா அவர்களே கழுதை வீட்டில் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே என்று நண்பர் வியப்புடன் கேட்டார். ராஜாவுக்குக் கோபம் வந்த விட, நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். என் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றிருக்கிறார் என்று சொன்னேன் என்றார். நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.



 




சோம்பேறிகள் எத்தனை பேர்


ஒரு நாள் சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் ரவி ஏறி நின்று கொண்டு, ரவி மக்களைப் பார்த்து, அன்பார்ந்த நண்பர்களே? உங்களில் எத்தனை பேருக்கு உடல் உழைப்பு இல்லாமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ வேண்டுமென்று ஆசைபடுகிறவர்களுக்கு நான் ஒரு வழி சொல்கிறேன். யாரெல்லாம் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் என்றார் ரவி. அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள்.


ரவி தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். என்ன ரவி அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே? என்று மக்கள் கேட்டனர்.


நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு தெரிந்து விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய் வருகிறேன் என்று கூறியவாறே ரவி செல்லத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக ரவி சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



 



உலகில் சிறந்தது


மன்னரிடம் சில காலம் தெனாலிராமன் அமைச்சராக இருந்தபொழுது, தெனாலிராமனை எப்போதுமே மன்னர் தன்னுடனே வைத்துக் கொண்டு உரையாடி மகிழ்வார். மன்னர் உணவருந்தும் சமயத்தில் தெனாலிராமனையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் தெனாலிராமனும் வழக்கம் போல அருகருகே அமர்ந்து உணவருந்தினார்கள். அப்போது மன்னர் தெனாலிராமனை நோக்கி, தெனாலிராமன் உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று நான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.


தெனாலிராமன் ஆமாம் மன்னர் அவற்றையே நானும் நினைக்கிறேன் என்றார். உடனே மன்னர் சமையற்காரனை அழைத்து, இனிமேல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு என்று உத்திரவிட்டார். நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது. அன்றைய தினம் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும் பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் தெனாலிராமனை நோக்கி உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்று தான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார். ஆமாம் மன்னர் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்ததில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை என்றார் தெனாலிராமன்.


என்ன தெனாலிராமன்? பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றீர்கள். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே என்று மன்னர் கேட்டார். தெனாலிராமன் சிரித்துக் கொண்டே மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன்.


 



தளபதியின் சமரசம்


மன்னர் முல்லாவுக்கு ஒரு வீடு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். ஆனால் மன்னர் அந்த வீட்டின் மாடிப்பகுதியை ஒரு படைத்தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். மாடியில் வசிக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருந்தது. முல்லா இரண்டு மூன்று தடவை படைத்தளபதியைச் சந்தித்து அவர் மனைவியிடம் கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்குமாறு சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.


அதற்கு படைத்தளபதியோ முல்லாவிடம், எனக்காக மன்னர் அளித்த வீடு. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்? என்று அதட்டி அனுப்பி விட்டார். மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியைக் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த படைத் தளபதி மாடியில் இருந்து கீழே என்ன செய்கிறாய் என்று கேட்டார். கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளி விட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.


அதற்கு படைத்தளபதி, முல்லாவிடம் கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா? என்று கோபத்தோடு கேட்டார். மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி. நான் எப்போதுமே யாருக்கும் நண்பன் தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.



 Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%