news Breaking News
clock

அரசின் நலத் திட்ட உதவிகள் வாக்கு அரசியல் அல்ல- ஸ்டாலின்

அரசின் நலத் திட்ட உதவிகள்  வாக்கு அரசியல் அல்ல- ஸ்டாலின்




சென்னை, செப்.16-

அன்புக்கரங்கள் திட்டம் வாக்கு அரசியல் அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர அவர்களுக்கு மாதம்தோறும். ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள்' திட்டத்தின் தொடக்கவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் என்றால் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல. இந்திய சமூகச் சூழலில், இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது, தெரியக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சிதான், திராவிட இயக்கம். அதனால்தான், மக்களோடு மக்களாக, மக்களுடைய குரலாக திமுக இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பொறுப்பு

மக்களுடைய தேவைகளை, சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களை பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை. அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம், சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம், மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய அடிப்படையே, “பதவி அல்ல; பொறுப்பு” தான்! அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது.

 

தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அன்புக்கரங்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். இதனால், 6,082 குழந்தைகளுக்கு, மாதம்தோறும் ரூ.2 ஆயிம் வழங்கப்படும். 

வாக்கு அரசியல் அல்ல

இது என்ன, வாக்கு அரசியலுக்காக செய்வதா? காலையில் பள்ளிக்கு பசியுடன் வர குழந்தையின் வேதனையைப் பார்த்தேன். காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினேன். இப்போது 21 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான உணவை பரிமாறுகிறோம். இவையெல்லாம் வாக்கு அரசியலுக்காக செய்வதா? இல்லை.

இப்படி ஏராளமான திட்டங்களை, முன்னெடுப்புகளை எங்களால் பட்டியலிட முடியும். இதற்கும் வாக்கு அரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாக்கு என்பது, மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்! அந்த நம்பிக்கையை பெறும், கொள்கையும், செயல்திட்டமும், உழைப்பும், எங்களிடம் இருக்கிறது.  

 அந்த அடிப்படையில் உருவானதுதான், இந்த அன்புக்கரங்கள் திட்டம். முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ள 6,082 குழந்தைகளுக்கு பள்ளி படிப்பை முடிக்கின்ற வரைக்கும் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம்.

உங்களுக்கு 18 வயது ஆகின்ற வரைக்கும், நீங்கள் கல்வியை தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு, கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் எல்லோரும் படித்து முன்னேற வேண்டும்! இதுதான் எனது விருப்பம்; எங்கள் லட்சியம்! இந்த லட்சியத்துக்கு துணையாகும் திராவிட மாடல் அரசின் கரம்தான், அன்புக்கரம்! நீங்கள் படித்து, டாக்டராக, என்ஜினியராக, விஞ்ஞானியாக- ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக, அரசியல்வாதியாக உயர்ந்து, சமூகத்துக்கு, சேவையாற்ற வேண்டும். 

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, பெற்றோரை இழந்து 12-ம் வகுப்பு முடித்து பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள 1340 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்கினார்.  

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் .நேரு, கீதா ஜீவன், .சுப்பிரமணியம், சேகர்பாபு, மேயர் பிரியா , குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சமூக நல இயக்குநர் சங்கீதா, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, தலைமைச் செயலர் ந.முருகானந்தம் வரவேற்றார். நிறைவாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News