அந்த மனசுதான் கடவுள்

அந்த மனசுதான் கடவுள்



பேருந்து நிறுத்தத்தில் கண் கலங்கியபடி அந்த மாணவி நின்றிருக்க, தாமு தன் சைக்கிளின் வேகத்தை மட்டுப்படுத்தி, அவளருகே சென்று நின்றான்.


 'யாருமா நீ?.. எதுக்கு இங்க நின்னு அழுதிட்டிருக்கே?" கேட்டான்.


 "அண்ணே... என்னோட டென்த் மார்க் சீட், டி.சி., பர்த் சர்டிபிகேட், கம்யூனிட்டி சர்டிபிகேட், எல்லாத்தையும் ஒரு கவர்ல போட்டு ஜெராக்ஸ் எடுக்கறதுக்காக கொண்டு வந்தேன்!... சைக்கிள்ல வரும் போது வழியில் எங்கேயோ அந்தk கவர் விழுந்திருச்சு!... நானும் நாலஞ்சு தடவை தேடிப் பார்த்துட்டேன்... கிடைக்கவேயில்லை..." சொல்லி விட்டு அழுதாள் அவள்.


  'கவலைப்படாதேம்மா... அந்த சான்றிதழ்களோட விபரங்களை இந்த பேப்பர்ல எழுதிக் கொடு... கூடவே உன்னோட முகவரியையும் எழுதிக் கொடு... நியூஸ் பேப்பர்ல போட்டு கண்டுபிடிச்சிடலாம்"


  "அய்யய்யோ... நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு எங்களுக்கு பணவசதி இல்லை".


  "தங்கச்சி... நான் அதிகாலையில் எந்திரிச்சுப் போய் பாலத்துக்குக் கீழே நியூஸ் பேப்பர் கட்டுகளைப் பிரிச்சு....

அதுக்குள்ளார விளம்பர நோட்டீஸ்களை வைக்கிற வேலை பார்க்கிறேன்... அதிலே எனக்கு தினமும் கொஞ்சம் பணம் கிடைக்கும்"


  "சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"


  "நீ எழுதிக் கொடுக்கிற இந்த பேப்பரை ஒரு 50 காப்பி ஜெராக்ஸ் எடுத்து நியூஸ் பேப்பர்ல நடுவுல வச்சு அனுப்புறேன்... நம்மோட அதிர்ஷ்டம் அதை பார்த்துட்டு யாராவது ஒரு நல்ல மனசுக்காரன் உன்னோட சர்டிபிகேட்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் கொடுப்பானல்லவா?


ஜோதி நம்பாமல் பார்க்க.


  "நம்பிக்கை வேணும்மா... ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது நம்பிக்கையோட ஆரம்பித்தால் நிச்சயமா ஜெயிக்கும்"சொல்லியவாறே சைக்கிளை மிதித்துப் பறந்தான் தாமு.

+++++

மறுநாள் மதியம் தன் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்க குழப்பத்துடன் வெளியே சென்று பார்த்தாள் ஜோதி. ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த அந்த பெரியவர், "நீதான் ஜோதியா?" கேட்க.


  "ஆமா... நீங்க?"


   "இந்தாம்மா உன்னோட சர்டிபிகேட்ஸ்... ரோட்ல கிடந்துச்சு... எடுத்துப் பார்த்தேன்... "அடடே யாரோ தொலைச்சிட்டாங்க போலிருக்கே!"ன்னு நெனச்சு... எடுத்துட்டுப் போய் என்கிட்ட பத்திரமா வெச்சிருந்தேன்... இன்னிக்கு காலையில நியூஸ் பேப்பர்க்குள்ளார நீ எழுதியிருந்த காகிதம் இருந்துச்சு.. அதில் உன்னோட அட்ரஸ் இருந்துச்சு... அதனால எடுத்துட்டு வந்தேன்!... வாங்கிக்கோம்மா"


   "ரொம்ப நன்றிங்க ஐயா" தழுதழுத்தாள் ஜோதி.


   அவள் தோளைத் தட்டிக் கொடுத்தவர், "இனிமேலாவது ஜாக்கிரதையா... பத்திரமா... வெச்சுக்கோம்மா" சொல்லி விட்டு அதே ஆட்டோவில் ஏறிச் சென்றார் அந்தப் பெரியவர்.


   தனக்கு உதவிய அந்த இளைஞனைச் சந்தித்து நன்றி சொல்ல மறுநாள் அதிகாலையில் எழுந்து பாலத்திற்கு அடியில் சென்று அவனைத் தேடினாள் ஜோதி.


  அவன் அங்கு இல்லாதிருக்க, அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தாள். "இங்கே ஒருத்தரு பேப்பர்ல நோட்டீஸ் எல்லாம் வைப்பாரே?"


  "தாமுவா?".


  "பேரெல்லாம் தெரியாது"


   "இங்க நியூஸ் பேப்பர்ல நோட்டீஸ் வைக்கிற வேலை செய்யவன் தாமு ஒருத்தன்தான்... ஆமா அவனை எதுக்கு நீ கேக்குற?"


   ஜோதி நடந்த விஷயங்களை அவரிடம் சொல்ல, அதைக் கேட்டு கண் கலங்கினார் அந்த ஆள்.


  "ஐயா நீங்க ஏன் கண் கலங்குகிறீங்க?".


  "கடைசி கடைசியா உனக்கு ஒரு உதவியை செஞ்சிட்டுப் போயிருக்கான் அந்த தாமு!"


  "ஐயா, என்ன சொல்றீங்க?"


  "ஆமாம்மா... நேத்து சாயந்தரம் சைக்கிள்ல போயிட்டுருந்தவனை ஒரு லாரிக்காரன் இடிச்சுச் சாகடிச்சிட்டுப் போயிட்டான் அம்மா"


இருதயமே நின்று போனது ஜோதிக்கு.


(முற்றும்)



 முகில் தினகரன்.

.கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%