அணி திரண்டு நிற்பாரே

அணி திரண்டு நிற்பாரே


நளினத்தாலும்

நனி அழகாலும்

நன்னடத்தையாலும்

நாடறிந்த 

நற்கலைஞராய் 

வாழ் நாளெல்லாம் 

வாகை சூடி

வண்ணத் திரைக்கு 

வளம் கூட்டியவள் நீ!

தெவிட்டா தேனமுதாம்

தீஞ்சுவை அள்ளும் 

தீராத்திரை வானில் 

எத்தனை எத்தனையோ நட்சத்திரங்கள் 

வந்து போயிருக்கலாம்

வனப்போடு நடிப்பும் காட்டி 

கலாரசிகக் கூட்டத்திற்கு

வற்றா மகிழ்ச்சி தந்து

வளர்ந்து வாழ்ந்தும்

போயிருக்கலாம்...

ஆனால் நீயோ?

 வரும் காலமெல்லாம்

வளர் கரும்பாய் இனித்து இதயம்

செழித்து சிறந்து

வானமாய் வளர்ந்து

வானமாய் இங்கேயே நிலைத்தாயே!

கலை நேர்த்தியில் நீ

காட்டாற்று வெள்ளம்.

காளையரை மட்டுமா 

கட்டிப் போட்டாய்..

காட்சியை கண்டு களித்தவரை யெல்லாம் 

காந்தமாய் இழுத்து 

காலமெல்லாம் 

சிறைப்பிடித்து  

சிருங்கார உணர்வுக்கு

சீர்சேர்த்து சிறந்தாயே

எல்லோரின் 

இதய சிம்மாசனத்திலும்

ஏறியமர்ந்து கொண்டு 

ஏரார்ந்த ரசனைக்கு 

ஏற்றம் அளித்தாயே!

கலை என்ற ஒன்று 

கண்டு பிடிக்காது 

போயிருந்தால் இங்கே 

மனிதனோடு மனிதமும் காணாமல் 

போயிருக்கும் 

பூவுலகமே 

பசுமை இல்லாமல் 

பாலைவனமாய் மாறி

பாழாய்ப் போயிருக்கும்...

மொத்தத்தில் 

கலை உணர்வு 

இல்லை யென்றால் 

கால் தூசுக்குக் கூட

தேற மாட்டான் இந்த மனிதன்...

இதயத் தோட்டத்தில் 

நெகிழ்வென்னும்

நீர் பாயா விட்டால் 

இதயம் வறண்டு 

எல்லாமும் இங்கே

வீழ்ந்து போய்விடும்.

கன்னடத்துப் பைங்கிளியே... கலையின் இந்தப் 

பெருமையினால் தான் 

கன்னடத்தில் நீ

பிறந்தாலும் 

காவேரித் தகராறு இரு

மாநிலங்களுக்கிடையே

மகாபாரதப் போர் போல

காலம் காலமாய் 

கடும்பகை கொண்டு நிலைத்தாலும் 

பேதம் எதுவும் பாராமல் 

பேழையாய் நெஞ்சில் 

உன்னை

பிழையின்றி வைத்து 

பேருவகை கொள்கிறோம்...

கொண்டாடி மகிழ்கிறோம்..

திரையுலகில் 

கொடிகட்டிப் பறக்கும் 

முன்னணி 

நாயக நாயகியருக்கு

நாகரீக மோகத்தில் 

நவம் நவமாய் 

பட்டங்கள் சூட்டி

பரவசம் காண்பது 

புதிதல்ல புதிதல்ல...

ஆனால் நீயோ 

அடியேனுக்குத் தெரிந்து 

இதுவரை யாருமே 

பெற்றிராத பெரும் பேரைப் பட்டமாய் பெற்று 

அழியாப் புகழ் அடைந்தாய்...!

அபிநய சரஸ்வதியே

கலங்கலே இல்லாத 

உன் கலை நயத்துக்கு

அன்னை தேசம் அளித்த 

ஆச்சரிய அங்கீகாரம் இது!

தாய் மொழி மீது 

தரமான அன்பு கொண்டிருந்தாய்...

அதனால் தானோ என்னவோ 

நீ திரையில் தோன்றிய 

ஆரம்பப் படமும் 

அந்தம் காண் படமும் 

கன்னடப் படமாகவே 

அமைந்து அருமை கூட்டியது உனக்கு!

ராஜாவின் பார்வை 

மட்டுமா இந்த 

ராணியின் பக்கம் 

இருந்தது...

இலட்சக் கணக்கான

இளைஞர்கள் பார்வை

மட்டுமா இந்த 

ராணியின் பக்கம் இருந்தது...

ஆறிலிருந்து அறுபது

என்ன எழுவது 

எண்பது என்று 

இறுதியை எட்டும் 

எல்லோரின் பார்வையும் அல்லவா

இந்த ராணியின் 

பக்கம் நங்கூரம் 

இட்டிருந்தது...

அந்தக் காலத்தில் 

உன்னால் 

அடியேனுக்கு நேர்ந்த 

இனிப்பான இம்சை

அனுபவங்களை யெல்லாம் 

அம்பலத்தில் ஏற்றினாலும் 

கொச்சை சிறிதளவும்

இருக்காது...

குணத்தில் நீ 

கோபுர உயரத்தில் 

இருந்ததனால்... !

குறை பல குடியிருக்கும்

திரை உலகில் இருந்தாலும் நீ

இதய சுத்தத்தில் 

இமயமாய் இருந்தாய்

அதனால் தான் 

இமயமாய் திகழ்ந்த 

நாயகரோடெல்லாம்

நலமாய் நடித்து 

நாகரீகம் காத்து 

நாலா திசைகளிலும்

நற்பெயர் வாங்கி 

நானிலம் போற்றும் 

நடிகையாய்

நாளெல்லாம் மிளிர்ந்து 

நிலைத்து ஜொலிக்க முடிந்தது உன்னால்!

நீ இவ்வுலகம் பிரிந்ததால்

எங்களுக்குத் தான் 

சோகம் கண்ணீர் எல்லாம்... ஆனால் 

உள் வருத்தம் கொஞ்சம் 

உறுத்தினாலும் 

உனக்கு இதனால் 

உவகை இன்பம் 

கூடுதல் கூடுதல் தான் 

காரணம் புரிகிறதா?

பூவுலகில்

உன்னுயிர் பிரிந்த

சேதி கேட்டு 

வானுலகில் உன்னை 

உச்சி முகர்ந்து வரவேற்க

சிவாஜி எம்ஜிஆர் 

ஜெமினி என்று 

எல்லோரும் சேர்ந்து 

ஆர்வமுடன் 

அணி திரண்டு வந்து நிற்பார்களே...

நாங்கள் பேச 

நினைத்ததை யெல்லாம் நீ

பேச வேண்டும் என்று 

உன்னை ஆராதித்து 

ஆனந்தம் கொள்வார்களே...! 



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%