அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் அறிமுகம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Jul 11 2025
17

புதுடெல்லி:
அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
உலக அளவில் ரயில் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பாளராக மாற வேண்டும் என்பதும் உள்நாட்டில் செலவு குறைந்த சரக்கு போக்குவரத்துக்கு முதுகெலும்பாக மாற வேண்டும் என்பதும் இந்திய ரயில்வேயின் நீண்டகால தொலைநோக்கு பார்வை. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல புல்லட் ரயில் திட்டத்தை 2027-ல் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் கூடுதலாக 35 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெர்மனி நாட்டின் ஒட்டுமொத்த ரயில் பாதைகளுக்கு சமமானது ஆகும்.
ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரயில் வேகன்கள் மற்றும் 1,500 இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. ரயில்வே துறைக்கான முதலீடு ரூ.25 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.2.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைகள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவில் 50% மட்டுமே ரயில்வே துறை கட்டணமாக நிர்ணயிக்கிறது. கடந்த 10 ஆண்டில் சரக்கு போக்குவரத்தில் 26% ஆக இருந்த ரயில்வே துறையின் பங்கு இப்போது 20% ஆக அதிகரித்துள்ளது. பயணிகளுக்கு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத் மற்றும் நமோ பாரத் என்ற பெயர்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?