24–-ந் தேதி முதல் ஆகஸ்ட் 8–-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்
சென்னை, ஜூலை 14 -
எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அண்ணா தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கடந்த 7-ந் தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதன்படி கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 33 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை 7 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அண்ணா தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 24-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, 25-ந் தேதி விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், 26-ந் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, 30-ந்தேதி மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவாடானை, 31-ந்தேதி ராமநாதபுரம், முதுகுளத்தூர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்
ஆகஸ்ட் 1-ந்தேதி கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, 2-ந் தேதி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டம் ராதாபுரம், 4-ந்தேதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, 5-ந்தேதி அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, 6-ந் தேதி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், 7-ந்தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, 8-ந்தேதி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்றும், சுற்றுப்பயணத்தின்போது சம்பந்தப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று அண்ணா தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.