"இந்தக் காதில் வாங்கி"

"இந்தக் காதில் வாங்கி"


 "துர்கா ஆட்டோ கன்சல்டெண்ட்".


  உபயோகிக்கப்பட்ட கார்கள் விற்பனை நிறுவனம் துவக்கப்பட்ட மூன்றே வருடங்களில் ஓங்கிச் செழித்திருந்தது.


  காரணம் அந்நிறுவனத்தின் முதலாளியான " துர்கா தேவி"தான்.


ஆரம்பத்தில் பெண் ஆட்டோ ஓட்டுனராய்த் துவங்கி, பலரது ஏச்சுப் பேச்சுக்களுக்கு ஆளானாள்.


அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு மோட்டார் துறையின் சகல நுணுக்கங்களையும் மொத்தமாய் தெரிந்து கொண்டு, "துர்கா ஆட்டோ கன்சல்டெண்ட்" நிறுவனத்தைத் தொடங்கினாள்.


 நேர்மறை விமர்சனங்களை விட நெகடிவ் கமெண்ட்களே வந்தன.

அவற்றை இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுச் சென்றதில் இன்று லட்சக் கணக்கில் வியாபாரம் செய்யும் நகரின் முக்கியப்புள்ளி.


காலை நேரம். 


 இண்டர்வியூவிற்காகக் காத்திருந்தவர்களை அட்டெண்ட் செய்தாள் துர்கா. 


அடுத்ததாய் வந்த பெண்ணைப் பார்த்ததும், "நீ...நீ...சுவாதி தானே?' கேட்க,


 "ஆமாம்... நீங்க என் கல்லூரித் தோழி துர்கா என்பதும் தெரியும்!... தெரிந்தும் காட்டிக்கலை" என்றாள் சுவாதி


  "ஏன்?"


   "கூச்சமாயிருந்தது... என்னோட சுற்றித் திரிந்த துர்கா இன்று பெரிய தொழிலதிபர்... நான் இன்னும் இண்டர்வியூவிற்குப் போகும் பெண்ணாக இருப்பதால்"


  "அதுக்குக் காரணம் என்ன?ன்னு யோசிச்சிருக்கியா?" துர்கா கேட்டாள்.


அவள் இட, வலமாய்த் தலையாட்ட, 


"சின்ன வயசுல நடந்த ஒரு விஷயத்தை உனக்கு நினைவூட்டறேன்... அதில் இருக்கு காரணம்"


அவள் விழிக்க,


"ஸ்கூல் ஆண்டு விழாவுல நாம ரெண்டு சேர்ந்து டான்ஸ் ஆட பெயர் குடுத்திட்டு பிராக்டீஸ் பண்ணினோம்... அப்ப நம்ம கிளாஸ் டீச்சர் "உங்க ரெண்டு பேருக்குமே டான்ஸ் வரலை... ஆட வேண்டாம்!"ன்னாங்க... நீ உடனே விலகிட்டே... ஆனா நான் ஆடினேன்... செகண்ட் பிரைஸ் கிடைச்சுது..."


 "சரி அதை எதுக்கு இப்ப...?"


 "நாம மத்தவங்க நம்மைப் பத்திச் சொல்ற விமர்சனங்களை... இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடணும்... அதுக்கு முக்கியத்துவம் குடுத்து நம்மை நாம் முடக்கிட்டோம்ன்னா உயர்வு கிடைக்காது... அந்த ஒரு இடத்துல மட்டுமில்ல பல இடங்களில் நீ அதே மாதிரிதான் நடந்தே... அந்தக் குணம்தான் உனக்குப் பெரிய மைனஸ் இருந்திருக்கு.. இப்ப என்னை எடுத்துக்க ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சப்ப ஏகப்பட்ட கடும் பேச்சுக்கள்... இந்தக் கம்பெனியத் துவக்கினப்ப நிறைய நெகடிவ் கமெண்ட்ஸ்... எல்லாத்தையும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுட்டு நான் பாட்டுக்கு என் வழில போய்ட்டே இருந்தேன்"


சில நிமிட அமைதிக்குப் பின், சுவாதி எழுந்து நடக்க, "உனக்கு வேலை ஓ.கே" என்றாள் துர்கா.


"இல்லை நான் ஆட்டோ ஓட்டப் போறேன்" கிளம்பினாள் சுவாதி.


(முற்றும்)



முகில் தினகரன்,

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%