கடையைப் பூட்டிவிட்டு இறங்கிய ஓனர் , " டேய் மாணிக்கம் ! வீட்டுக்கு வந்துட்டுப் போ " என்றார்.
அவர் பின்னால் சென்று வீட்டுக்குள் நுழைந்த பொழுது கடைக்காரரின் மனைவி கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன் தயாராய் நின்றுகொண் டிருந்தாள்.
பையை அவளிடமிருந்து வாங்கிய கடைக்காரர், மாணிக்கத்திடம் நீட்டி னார்." இந்தால. இதுல வீட்டுல செய்த பரோட்டா குருமா இருக்கு. நீயும் உன்
சம்சாரமும் சாப்பிடுங்க. "
அடிக்கடி முதலாளி இப்படி பலகாரம்
கொடுப்பது மாணிக்கத்துக்கு சங்கட
மாயிருந்தது . அதனால் சற்று தயங்கி
னான்.
" ஐயா ! உங்களுக்கெதுக்குங்க சிரமம் ! "தலையை சொரிந்தபடி அசடு வழிந்தான் மாணிக்கம்.
" டேய்..சிரமம்லாம் ஒண்ணுமில்ல. வாங்கிட்டுப்போ. அசட்டு சிரிப்புடன் வாங்கிக் கொண்டவன் , " ஐயா ! ரொம்ப நன்றிங்க. அம்மணி , ஒங்களு க்கும்தான் ." என கூறிவிட்டு அகன்
றான்.
மாணிக்கம் அந்த மளிகைக் கடையில்
13 வருஷமாக வேலை செய்து வருகி
றான். அநியாயத்துக்கு நேர்மையான
வன். சாமான்களை எடை நிறுத்தி மிக
கச்சிதமாக பொட்டலம் கட்டுவான். பணத்தை வாங்கி கல்லாவில் உட்கா ர்ந்திருக்கும் முதலாளியிடம் கொடு ப்பான்.
மாணிக்கத்துக்கு முன்னால் இருந்தவர்கள் ஆறுமாதத்திற்கு மேல் நிலைக்கவில்லை. மாணிக்கத்தின் நேர்மை, அதீத சுறு சுறுப்பு அவனை 13 வருஷங்களாககடையில் நிலைத்து இருக்க வைத்தது. அதனால் முதலாளிக்கு மாணிக்கம் பேரில் நிறையபிரியம் உண்டு. எப்பொழுதாவது தன் வீட்டில் பண்ணும் ஸ்பெஷல் ஐட்டங்களை மாணிக்கத்துக்கு தருவார்.
குடிசையில் நுழைந்ததும் மனைவி ருக்கு எதிர்பட்டாள். " இதோ பாரு புள்ளே ! முதலாளி நமக்கு சூடா பரோட்டா குருமா கொடுத்திருக் காங்க. நான் பின்னால போய்
முகம், கை,.கால் கழுவிக்கிட்டு வரேன். நீ போய் தட்டு எடுத்து வை" என சொல்லிவிட்டு பின் பக்கம் சென்றான் மாணிக்கம்.
ருக்கு பையை மூலையில் வைத்து விட்டு அலுமினியத் தட்டெடுக்கச் சென்றாள். சில நிமிஷங்கள்கூட ஆகியிருக்காது.எதிர் குடிசையைச் சார்ந்த அன்னம்மா , " அடியே ருக்கு ! அந்தப் பைத்தியக்காரப் பயல் உன் வீட்டிலேர்ந்து பையைத் தூக்கிக்கிட்டு ஓடறான்டி !" பதற்றத்துடன் கூக்கு ரலிட , ருக்கு அரக்க பரக்க வாசலுக்கு ஓடிப் போய் பார்த்தாள். அவன் வேறு யாருமல்ல . மூளை மழுங்கிப்போய் பைத்தியமாக நடமாடும் பையன் பாலு தான். பெற்றோர் இல்லாத அநா தை. குப்பத்தில் யாராவது அவனுக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருப்பர்.
பின் கட்டிலில் இருந்து மாணிக்கமும்
பட படப்புடன் ஓடி வந்தான்." என்ன ருக்கு ! இன்னாத்த தூக்கிக்கிட்டு
போயிட்டான் .. ?"
" ஒண்ணுமில்ல மச்சான் ! நீ கொண்டு
வந்த பரோட்டா பையத்தான் எடுத்துக்
கிட்டு ஓடுறான் "
" இன்னாது...பரோட்டாவா ..ஏது ?" அன்
னம்மா கேட்டாள்.
" அக்கா ! மச்சான் வேலை செய்யற முதலாளி வீட்டுல செய்தாங்களாம். முதலாளி விருப்பப் பட்டுக் கொடு த்தது. ஹூம் ! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல்ல !" பெருமூச்சொன்று ருக்குவிடமிருந்து வெளிப்பட்டது !
ருக்குவை நமுட்டுச் சிரிப்போடுஉற்று நோக்கிய அன்னம்மா, " தானமா வந்ததா? சரிதான், அதுலயும் மண்ணா ?" என்றாள் கிண்டலோடு !
ருக்குவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
" ஆமா..எங்க வாயில மண்ணுதான்....
ஆனாலும் மனசு பேதலிச்ச அந்தப் பையன் வாயில அமிர்தமாப் போச்சு இல்ல.அவன் வயிறு குளிர்ந்து போனது எங்க வயிறு நிறைஞ்ச மாதிரி !" நறுக் கென்று கூறிவிட்டு தன் புருஷனை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
பாலு பைத்தியம் பிடித்தவன் என்று
சொல்ல விரும்பாமல் ' மனசு பேத
லிச்சவன் ' என தன் மனைவி சொன்
னது மாணிக்கத்தின் மனதை விரிவ
டையச் செய்தது !
" ருக்கு ! பரோட்டா போனதுல ஒனக்கு
வருத்தமில்லையே ?"
" ஆரம்பத்துல இருந்தது. ஆனா எடுத்தது இன்னார்னு தெரிஞ்சது க்கப்புறம் எம் மனசு சமாதானமா யிடிச்சு மச்சான் !"
" உன்ன பெண்ஜாதியா அடைய நான்
கொடுத்து வச்சிருக்கணும் ருக்கு ! " ருக்குவை மென்மையாக அணை த்துக்கொண்டான் மாணிக்கம்.

வி.கே.லக்ஷ்மிநாராயணன்