📖 விரிவான விளக்கம்
மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிரும், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்களும், கோவில்களில் அதிகாலையில் நடக்கும் வழிபாடுகள் போன்றவைதான். ஆனால் மார்கழி மாதம் எத்தனை புனிதமானது என்று தெரியுமா. இந்த மாதம் பகவான் விஷ்ணுவிற்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகும்.
*மார்கழி என்றால் என்ன?*
மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் "மேலான வழி" எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி.
ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். இதன் மூலம் பக்தி மட்டுமின்றி பொது நலமும் மேலான வழி என்பதை ஆண்டாள் நமக்கு காண்பித்து இருக்கிறாள்.
*மார்கழி மாதம் ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?*
வைணவத்தின் பெருமைக்கு உரிய மாதம் மார்கழி தான். கிருஷ்ண பரமாத்மாவே 'மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மாதம் அல்லவா? திருப்பாவை தோன்றிய தெய்விக மாதமும் இதுதான். பகவானைத் தொழுவதற்கென்றே உருவான மாதம் என்பதால் இந்த மாதத்தில் மங்கள காரியங்கள் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை.
பகவத் கீதை அத்தியாயம் 10 இல், கிருஷ்ணர் தனது பல்வேறு விபூதிகளை (இறைவனின் வெளிப்பாடுகள்) அர்ஜுனனுக்கு விவரிக்கிறார். அதில் "மாதங்களில் நான் மார்கழி" என்றும், இந்த மார்கழியே 12 மாதங்களில் தனக்கு மிகவும் பிடித்த மாதம் என்றும் அவரே உறுதியாகக் கூறுகிறார். அவரை நினைத்து அவரிடம் பிரார்த்தனை செய்பவர்கள், குறிப்பாக மார்கழி மாதத்தில் அவரது அருளை பெற்றுக் கொள்வது உறுதி.
*பாவை நோம்பு*
மார்கழியின் போது திருமணமாகாத பெண்கள் செழிப்பு அடையவும் நல்ல துணையைப் பெறவும் "பாவை நோம்பு" என்ற விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். இந்த பாவை நோம்பின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது, இது கோதை நாச்சியார் கிருஷ்ணருடன் (விஷ்ணுவின் அவதாரம்) இணைவதற்காக இந்த நோம்பை தாமே உபசரித்துள்ளார். இந்த விரதத்தை பெண்கள் பிரம்ம முகூர்த்தத்தின் போது எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து, தங்கள் முன் முற்றத்தை பசுவின் சாணத்தால் சுத்தம் செய்து, அரிசி மாவு கோலமிட்டு, அதை பூசனை பூவால் அலங்கரித்து, விஷ்ணு கோயில்களுக்குச் சென்று, ஆண்டாள் விஷ்ணுவைப் எண்ணி தொகுத்த 30 தமிழ் பாடல்களான திருப்பாவையை பாடுவார்கள்.
மார்கழி மாதத்தின் அந்த 30 நாட்களில் மக்கள் அசைவ உணவுகள், நெய் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் கண்ணியமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டிய காலகட்டம் இது, மேலும் பிற மக்களைத் திட்டுவதையும், புறம் பேசுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த நற்செயல்கள் அனைத்தும் நம்மை கடவுளை நோக்கி கொண்டு செல்லும்.
பனிபொழியும் விடியற்காலையில் திருமால் ஆலயங்களில் திருப்பாவை ஒலிக்கும் அது மிகவும் அற்புதம். வாசல்தோறும் அழகியக் கோலங்களும், வீதிதோறும் பக்திப்பாடல்களும் ஒலிக்கும் உன்னத மாதம் இது. சாணத்தில் பூசணிப்பூவை செருகி வைத்து வழிபாடாகவும், வைத்தியமுறையாகவும் தமிழர்கள் வாழும் சிறப்பான மாதம் இது. பாற்கடல் கடையப்பட்டதும் மார்கழியில் தான். மலர்களும், கனிகளும் மலிந்து கிடைக்கும் இயற்கைக்கு இணக்கமான மாதமும் மார்கழியே. ஹனுமன் பிறந்த மாதம் இது. சொர்க்க வாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் மாதமும் மார்கழி தான். அழகிய தமிழால் அரங்கனை ஆண்ட ஆண்டாள், பாவை நோன்பு நோற்ற புண்ணிய காலம் இது.
சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரம்ம முகூர்த்தத்தில் வீசும் காற்று உடலுக்குப் பல நன்மைகளைச் செய்யக்கூடியது என்பதாலேயே அந்த வேளையில் எழுந்து கோலமிட்டு, நீராடி, கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். மார்கழியின் அதிகாலையும், அந்திப்பொழுதும் இறைவனுக்காகவே ஒதுக்க வேண்டும். இந்த மாதத்தில் செய்யப்படும் பூஜைகளும், விரதங்களும் கோடி மடங்கு பலனைத் தரும் என்று ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். அதையே ஆண்டாள் நாச்சியாரும் நமக்கு கூறுகிறார்.
இன்னொரு சிறப்பும் மார்கழிக்கு உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் ஒவ்வொரு பெயரையும் சொல்லி அழைக்கிறது வேதம். அந்த வகையில் மார்கழிக்கான பெயர் "கேசவன்". கண்ணனின் நாமாவளிகளில் உன்னதமான சிறப்பினைக் கொண்ட பெயர் கேசவன். அழகிய கூந்தலைக் கொண்டவர் என்பதாலும், கேசி என்ற அசுரனைக் கொன்றதாலும் கிருஷ்ணர் 'கேசவன்' எனப் போற்றப்பட்டார்.
ஆன்மிகத்தை வலியுறுத்தும் இந்த ஆனந்த மார்கழியில் ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் தோன்றயதால் இன்னும் பெருமை கொண்டது.
*"மார்கழியில் இறைவனை வணங்காத ஜீவனும் வீண் என்பார்கள்"*
இந்த அற்புதமான மார்கழி மாதத்தில் இறைவனை மனமார துதித்து மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்வோம்.
*ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்*
*"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"*
*"ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகர் திருவடிகளே சரணம்"*
எம் அசோக்ராஜா __
அரவக்குறிச்சிப்பட்டி __
திருச்சி _620015__