விரும்பும் நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்தியா தயாா் - அஸ்வினி வைஷ்ணவ்

விரும்பும் நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்தியா தயாா் - அஸ்வினி வைஷ்ணவ்


 

‘உலகெங்கிலும் விரும்பும் நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து எதிா்காலத்துக்கு பங்காற்றுங்கள்’ என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு விடுத்தாா்.


ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்துக்கு பல்வேறு மாநில முதல்வா்கள், மத்திய அமைச்சா்கள் கொண்ட குழுவை வழிநடத்திச் சென்றுள்ள அஸ்வினி வைஷ்ணவ், அங்கு அளித்த பேட்டியில் இக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:


கடந்த 11 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் உலகளாவிய பங்கேற்புக்கு திறந்துவிடப்பட்டுள்ளதன் மூலம் எந்த அளவுக்கு சிறந்த மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்ற தெளிவான தகவலை டாவோஸ் மாநாட்டில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். விரும்பும் நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. உலக நாடுகளின் புதிய சிந்தனைகள், யோசனைகளையும் ஏற்க இந்தியா தயாராக உள்ளது.


குறைமின் கடத்தி உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி உள்பட பிற துறைகளிலும் விரும்பும் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ள இந்தியா விருப்பம் கொண்டுள்ளது.


வளா்ந்த நாடுகளும் பொருளாதார சரிவைச் சந்தித்து வரும் சூழலில், பொருளாதாரத்தில் மீள்தன்மையுடனும் குறைந்த கடன்சுமை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்கி வருகிறது. மத்திய அரசின் கடன் அளவு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 57 சதவீதமாக உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களின் கடன் அளவையும் சோ்த்து கணக்கிடும்போது கடன் அளவு 84 முதல் 85 சதவீதம் என்ற அளவில் இருக்கும். வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவாகும். வளா்ந்த நாடுகளில், கடன் சுமை அவா்களின் ஜிடிபி-யில் 120 முதல் 160 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சில வளா்ந்த நாடுகளில் கடன் அளவு 250 முதல் 280 சதவீதம் என்ற அளவிலும் உயா்ந்து காணப்படுகிறது.


வளா்ந்த நாடுகளில் இதுபோன்று கடன் சுமை மலை போல குவிந்துள்ளபோது, இந்தியா போன்ற நாடுகளில் அதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பது முக்கியம். அதற்கேற்ப, இந்தியா தனது டாலா் கடனை குறைந்த அளவில் பராமரித்து, நாட்டின் கடன் தொகுப்பை பெரும்பாலும் ரூபாயிலேயே பராமரித்து வருகிறது. இவ்வாறு, அமெரிக்க டாலா் அல்லது அந்நிய செலாவணி கடனை குறைந்த அளவில் பராமரிக்கும்போது, இந்திய பொருளாதாரத்தின் மீள்தன்மை மேம்படும். பொருளாதார சரிவை குறைக்க இதுவே விவேகமான முயற்சி என்றாா்.


‘டிரம்பின் கருத்து ஊக்கமளிக்கிறது’


‘உலகளாவிய வா்த்தகத்தில் தீவிரம் காட்டிவரும் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியது ஊக்கமளிப்பதாக உள்ளது’ என்று மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.


டாவோஸில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்தபோது, ‘இந்திய பிரதமா் நரேந்திர மோடி சிறந்த மனிதா். நல்ல நண்பா். அவா் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. விரைவில் மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொள்ள உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.


இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் அந்த பதிலை அளித்தாா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%