வாழ்வில் சந்தேகம் எனும் வித்து விழுந்து விட்டால், அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விஷவிருட்சமாக மாறிவிடும். கடைசியில் இப்படி மண முறிவில்தான் வந்து முடியும். சசிகலா விஸ்வநாதனின் சந்தேகம் எனும் வித்து சிறுகதை இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது!
மு.மதிவாணனின் 'போலித் தோற்றங்கள்' என்ற சிறுகதை சிந்தனைக்குரியது. கண்டக்டர் ரங்கநாதன் தனது பணியில் மிகச் சரியாக, சிறப்பாக இருக்கிறார் என்பது நல்ல விஷயம்தான். அவர் வேலையுடன் சம்பந்தப்பட்ட டிரைவர் கார்மேகம் அவரது சிறப்பான பணியை மதிக்க வேண்டியவர்தான்; அதோடு சரி! கண்டக்டர் ரங்கநாதன் எல்லாவகையிலும் சிறந்த மனிதராக இருப்பார் என்று டிரைவர் கார்மேகம் நினைப்பது அவர் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம். எத்தனையோ கயவர்கள், தில்லுமுல்லுக்காரர்கள், ஊழல்பேர்வழிகள் வெளி உலகிற்கு மோசமாக இருந்தாலும், வீட்டில், தனது மனைவி மக்கள் சொந்தபந்தங்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்கிறார்கள். அதுபோலதான் இதுவும்!
சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள் தொடர்கதையில் இலக்கியாவின் திருமணம் வேறு இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கூடிவருவது போல தோன்றினாலும், எனக்கென்னவோ இந்த திருமணம் நடக்காது என்றுதான் தோன்றுகிறது. கடைசியில் எப்படியோ இலக்கியாவின் திருமணம் தீபக்கோடுதான் நடக்கும் என்று என் மனம் இன்னும்கூட நம்புகிறது!
'சிவ பூஜையில் கரடி' என்பதன் உண்மையான அர்த்தம் இப்போதுதான் எனக்கு புரிகிறது. கரடிகை என்ற இசைக்கருவி பழங்காலத்தில் இருந்ததும், அது சிவபூஜையின் போது இசைக்கப்பட்டதும், அது நாளடைவில் சிவபூஜையில் எப்படி கரடி என்று பழமொழியாக மாறியது என்பதையும் கட்டுரையாசிரியர் லட்சுமி ஆவுடைநாயகம் அழகாக விளக்கியிருந்தார். அவருக்கு எனது பாராட்டுகள்.
முகில் தினகரன் தனது 'பூமாலை' என்ற கவிதையில் 'கடவுள் கழுத்தில் விழுகையில் தெய்வீகம், கன்னியின் தோளில் படர்கையில் இல்லறம்' என்றெல்லாம் அழகாக சொல்லி வந்தபோது, மனது மகிழ்ந்துப் போனது. ஆனாலும் கடைசியில் 'எல்லோருக்கும் ஓர்நாள் கிட்டுமிந்த பூமாலை' என்றபோது மனது கொஞ்சம் திடுக்கிட்டு பயந்துப்போனது. என்ன பயந்தாலும் கடைசியில் அதுதான் உண்மை என்பதை சிந்தனை தெளிவாக உணர்ந்தது.
பன்முகம் பகுதியில் அரிசியால் புற்றுநோயாயென்று கொஞ்சம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் படித்தாலும், உலகின் காலநிலை மாற்றமும், அதனால் எதிர்காலத்தில் வர இருக்கும் பல வாழ்வியல் மாற்றங்களையும் உணர முடிகிறது. இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இந்த உலகில் வெறும் 20 கோடியாக இருந்த மக்கள் தொகை இன்று 8024 மில்லியனாகி, இன்னும் அதிகரித்துக்கொண்டே போகிறது. நினைக்க கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் இது இப்படியே இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகரித்துக்கொண்டே போகமுடியாது. இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்றே தோன்றுகிறது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.