வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு),12.07.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு),12.07.25



  'இதயக்கோளாறுகளும் ஸ்மார்ட்போனும்!' என்ற நலம் தரும் மருத்துவ தகவலை படித்து திடுக்கிட்டுப்போனேன். அமைதியற்ற ஒரு மனநிலையை உருவாக்கி தூக்கமின்மைக்கும் காரணமாவது திறன்பேசிகள்தான் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது என்பது உண்மைதான். எது எப்படியோ, நான் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை lகுறைத்துக்கொள்ள தீர்மானித்து விட்டேன்.


  மு.மதிவாணனின் 'நல்ல மனம் வாழ்க' என்ற சிறுகதை ராம்பிரகாஷின் நல்ல மனதை காட்டியது. கதையை படித்து முடித்தவுடன் எனக்கும் அந்த பூஜாவை போல ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.


வி. பிரபாவதியின் 'அடிப்படை நட்பு' என்ற சிறுகதையை படித்து அது உண்மைதான் என்று உணர்ந்தேன். சென்னையில் இருக்கும் எங்களது அப்பார்ட்மென்டில் மொத்தம் 32 வீடுகள் இருக்கின்றன. உண்மையிலேயே எதிரே யார் இருக்கிறார்கள், பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் சரியாக தெரியாது. இனிமேலாவது பக்கத்து பக்கத்தில் இருப்பவர்களிடம் மிகவும் குழைந்து பழகாவிட்டாலும் அடிப்படை நட்புடனாவது இருக்கவேண்டும் என்பதை புரிந்துக்கொண்டேன்.


  எனக்கு சனி பகவான் என்றாலே ஒரு பயம் இருந்து வந்தது. 'ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருக... சனிக்கிழமையில் இதை செய்யுங்கள்...!' என்ற சிவசக்தியின் கட்டுரையை படித்தபிறகு, அந்த பயம் போய், அவரை வணங்கி பயன்பெறலாம் என்பதை புரிந்துக்கொண்டேன்.


  'கண்டா வரச் சொல்லுங்க...!' என்ற கவிதையில் குமரி உத்ரா சொல்லியிருந்ததை போல கிளிகள், குயில்கள், காக்கைகள், தும்பிகள், வண்ணத்துப்பூச்சிகள், மரங்கொத்திகள், மைனாக்கள், சிட்டுக்குருவிகள், அணில்கள் போன்ற பல உயிர் வாழ்வினங்கள் குறைந்துப்போனதற்கு நிச்சயம் மனிதர்களின் சுயநல போக்குதான் காரணம். இந்த கவிதை அந்த வருத்தத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறது.


  'காதலின் இலக்கணம் அன்றில் பறவை' என்ற கட்டுரையில் சிவ.முத்து, அதன் இலக்கிய சிறப்பையும், அதன் பெருமையையும் விரிவாகவும் சுவையாகவும் சொல்லியிருக்கிறார். அன்னப்பறவையை போல அன்றில் பறவையும் அழிந்து விட்டதாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அன்றில் பறவைகள் இன்னும் இருக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய பறவைகளை இயற்கை சூழ்நிலைகளை பாழ்படுத்தாமல், பாதுகாத்து பெருக வழி செய்யவேண்டியது ஆறறிவு உள்ளதாக சொல்லிக்கொள்ளும் மனிதர்களின் முக்கிய கடமையாகும்.



  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%