வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் - போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு
Jul 19 2025
10

வன்முறையால் பாதிக்கப்பட்ட கோபால் கஞச் நகரம்
டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
வங்கதேசத்தின் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு ஓராண்டை நிறைவு செய்ய உள்ளதை முன்னிட்டு, மாணவர்களின் அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் இந்த மாதத்தில்( ஜூலை ) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று கோபால்கஞ்ச் நகரில் பேரணி நடத்தப்பட்டது.
ஷேக் ஹசீனாவின் மூதாதையர்கள் வாழ்ந்த நகரமான இது, அவாமி லீக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பலத்த பாதுகாப்புடன் பேரணி தொடங்கியது. அப்போது, அவாமி லீக் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். பல்வேறு வாகனங்களுக்குத் தீ வைத்த அவர்கள், போலீஸார் மீது தாக்குதல்களை நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வன்முறையை அடுத்து, மாணவர் தலைவர்கள் காவல் நிலையங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். பலர், போலீஸ் பாதுகாப்புடன் அண்டை மாவட்டங்களுக்கு விரைந்தனர்.
கோபால் கஞ்ச் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது அங்கு கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?