: ஜனவரி 2- ந்தேதி
மரகத நடராஜர் சந்தனம் களையும் நிகழ்ச்சி
ராமநாதபுரம்,
ராமேசுவரம் கோவில் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் திருவாதிரை ஆருத்ரா திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவிற்கு முதல் நாளான நேற்று கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் ருத்ராட்சை மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கும் மற்றும் மாணிக்கவாச கருக்கும் காப்பு கட்டப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட் டது.
அதுபோல் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் 3-ந் தேதி வரையிலும் தினமும் தங்க கேடயத்தில் மாணிக்கவாசகர் 3- ஆம் பிரகாரத்தில் உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. 3-ந் தேதி அன்று அதிகாலை 2 மணி முதல் நடராஜருக்கு கால் பன்னீர், திரவியம், மாபொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. அதன் பின்னர் நடராஜருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சூரிய உதய நேரத்தில் ஆருத்ரா தரிசன பூஜையும் நடைபெறுகின்றது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத் துரை தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருஉத்தரகோசமங்கை கோவில்:
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்களநாதர் கோவிலிலும் திருவாதிரை ஆருத்ரா திரு விழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு நடராஜர் மற்றும் மாணிக்கவாசகருக்கும் சாமி -அம்பாளுக்கும் காப்பு கட்டுதலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் மிக முக்கிய நிகழ்ச்சியாக 2-ந் தேதி அன்று கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதி காலை 8 மணிக்கு திறக்கப்படுகின்றது. தொடர்ந்து, நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் முழுவதுமாக களையப்பட்டு நடராஜருக்கு மாபொடி, மஞ்சப்பொடி, பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட 32வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. தொடர்ந்து பகல் மற்றும் இரவு வரையிலும் பச்சை நடராஜர் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
பின்னர் ஜனவரி 3-ந்தேதி அன்று அதிகாலை 2 மணி முதல் மீண்டும் நடராஜருக்கு 32 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதிகாலை 5 மணிக்கு மரகத நடராஜர் மீது சந்தனம் சாத்தப்பட்டு சூரிய உதய நேரத்தில் ஆருத்ரா தரிசன பூஜையும் நடைபெறுகின்றது.
திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறந்து பக்தர்கள் மரகத நடராஜரை தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். இந்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி அன்று மரகத நடராஜர் சன்னதி திறந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.