
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் கடந்த மூன்று நாட்களில், 33 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், விமான நிலைய கமிஷனரின் உத்தரவுப்படி சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 8ம் தேதி முதல் சோதனையை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து, கடந்த 9ம் தேதி அதிகாலை, மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது உடைமையில் மறைத்து வைத்திருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஹைட்ரோபோனிக் வீட்' எனப்படும் தண்ணீரில் வளர்க்கப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அப்பயணியை கைது செய்தனர்.
இதேபோல், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து வந்த பயணியரின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, 2.42 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா வைத்திருந்த பயணியை கைது செய்தனர். இது தவிர, பாங்காக்கில் இருந்து அடுத்தடுத்து வந்த விமானங்களில், 14.37 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், மூன்று பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே, இரண்டு பயணியரிடம் இருந்து போதைப்பொருளை பெற, விமான நிலைய வளாகத்தின் வாகன நிறுத்தத்தில் காத்திருந்த நபரை, சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். இதேபோல், 11 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி வந்த இரண்டு பயணியர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும், மும்பை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை வாயிலாக 33 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?